பிரவலூர் ஊராட்சிக்கு கேடயம், ரூ.7½ லட்சம் பரிசு

தூய்மை பாரத இயக்க திட்டத்தின் கீழ் சுகாதாரத்தில் சிறந்ததாக தேர்வு செய்யப்பட்ட பிரவலூர் ஊராட்சிக்கு கேடயம் மற்றும் ரூ.7½ லட்சம் பரிசுத்தொகையை குடியரசு தின விழாவில் கலெக்டர் வழங்கினார்.

Update: 2023-01-27 18:55 GMT

தூய்மை பாரத இயக்க திட்டத்தின் கீழ் சுகாதாரத்தில் சிறந்ததாக தேர்வு செய்யப்பட்ட பிரவலூர் ஊராட்சிக்கு கேடயம் மற்றும் ரூ.7½ லட்சம் பரிசுத்தொகையை குடியரசு தின விழாவில் கலெக்டர் வழங்கினார்.

முன்மாதிரி ஊராட்சி பிரவலூர்

சிவகங்கை ஒன்றியத்தை சேர்ந்தது பிரவலூர் ஊராட்சி. இந்த ஊராட்சி மன்றத்தின் தலைவராக கவிதா முருகன் கடந்த 2020-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார். தன்னுடைய ஊராட்சியை சுகாதாரத்தில் சிறந்த ஊராட்சியாக மாற்றி மாவட்ட அளவில் விருதும் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இதையொட்டி அவருக்கு சிவகங்கையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி பிரவலூர் ஊராட்சி மன்ற தலைவர் கவிதா முருகனிடம் முன்மாதிரி கிராம விருதுடன் கேடயம் மற்றும் பரிசு வழங்கினார். இது தொடர்பாக ஊராட்சி மன்ற தலைவர் கவிதா முருகன் கூறியதாவது:-

நிர்மல் புரஸ்கார் விருது

இந்த ஊராட்சியில் பிரவலூர், மாசாத்தியார் நகர், கோகுல கிருஷ்ணன் நகர் ஆகிய பகுதிகள் அடங்கியுள்ளது. இந்த ஊராட்சியின் தலைவராக ஏற்கனவே என்னுடைய கணவர் கடந்த 2006 முதல் 2011-ம் ஆண்டு வரை தலைவராக பதவி வகித்துள்ளார்.

இந்த ஊராட்சியை தமிழகத்திலேயே சிறந்த ஊராட்சியாக முன்மாதிரி ஊராட்சியாக மாற்ற வேண்டும் என்பதற்காகவும் தொடர்ந்து பாடுபட்டு வருகின்றோம். கிராம மக்களுக்கு தேவையான சிமெண்ட் ரோடு, பேவர் பிளாக் ரோடு ஆகியவை அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சுகாதாரத்தை பேணி பாதுகாக்க வேண்டும் என்பதற்காக ஊராட்சியில் கழிவுநீர் வாய்க்கால்கள் அமைக்கப்பட்டு அந்த தண்ணீர் தேங்கி நிற்காமல் உறிஞ்சி குழாய் அமைத்து பூமியில் உறிஞ்சப்படுகிறது. மேலும் ஊராட்சியில் உள்ள 450 வீடுகளுக்கும் தனிநபர் கழிப்பறை கட்டிக் கொடுத்து 100 சதவீதம் கழிப்பறை அமைக்கப்பட்ட ஊராட்சியாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே கடந்த 2010-ம் ஆண்டு முழு சுகாதார இயக்கத்தின் திட்டத்தில் நிர்மல் புரஸ்கார் விருதும் இந்த ஊராட்சிக்கு கிடைத்துள்ளது. தொடர்ந்து இந்த ஊராட்சி மக்களுக்கு பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ரூ.7½ லட்சம் பரிசு

தமிழக அரசின் தூய்மை பாரத இயக்கத் திட்டத்தின் கீழ் சுகாதாரத்தில் சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சிகளை ஊக்குவிக்கும் வகையில் முன்மாதிரி கிராம விருது வழங்கப்படுகிறது. இந்த விருது மாவட்டத்திற்கு ஒரு கிராம ஊராட்சி என்ற அடிப்படையில் வழங்கப்படுவதுடன் விருதுக்கான கேடயமும், ரூ.7½ லட்சம் பரிசுத்தொகையும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதேபோன்று மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் ஊராட்சிக்கு மாநில அளவிலான முன்மாதிரி விருதும் வழங்கப்பட உள்ளது.இதில் மாவட்ட அளவிலான முன்மாதிரி விருது எங்கள் ஊராட்சிக்கு கிடைத்துள்ளது. இதையொட்டி சிவகங்கையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி இந்த விருதை வழங்கி பரிசு தொகையை வழங்கினார். இந்த தொகையைக் கொண்டு ஊராட்சியின் தேவைகளை நிறைவு செய்து தன்னிறைவு பெற்ற ஊராட்சியாக மாற்றி மாநில அளவிலான முன்மாதிரி கிராம ஊராட்சி விருது பெற நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். மேலும் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் ரூ.35 லட்சம் கண்மாய் தூர்வாருதல் பணிகள் நடக்கிறது. இது தவிர ரூ.28 லட்சத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்