மொட்டை அடிக்கும் தொழிலாளர்கள் திடீர் போராட்டம்

புகைப்படத்துடன் கூடிய பதிவுச்சீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து பழனி முருகன் கோவிலில், மொட்டை அடிக்கும் தொழிலாளர்கள் நேற்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-04-26 15:18 GMT

முடி காணிக்கை

பழனி முருகன் கோவிலுக்கு தரிசனம் செய்ய வருகை தரும் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்துதல், காவடி எடுத்தல், அலகு குத்துதல் போன்ற நேர்த்திக்கடன்களை செலுத்துகின்றனர்.

இதில் முடி காணிக்கை செலுத்தும் பக்தர்கள் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பில் திருஆவினன்குடி, கிரிவீதிகள், சண்முகநதி உள்ளிட்ட இடங்களில் முடி காணிக்கை நிலையங்கள் உள்ளன. இங்கு 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் முடிக்காணிக்கை செலுத்த இலவசம் என அறிவிக்கப்பட்டது. இதேபோல் மொட்டை அடிக்கும் தொழிலாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் மாதாந்திர ஊக்கத்தொகை மற்றும் பங்குத்தொகை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

திடீர் போராட்டம்

இந்து சமய அறநிலையத்துறையின் இந்த அறிவிப்புக்கு பக்தர்கள் மத்தியில் வரவேற்பு இருந்தாலும், மொட்டை அடிக்கும் தொழிலாளர்கள் தங்களுக்கான ஊக்க மற்றும் பங்குத்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் பழனி முருகன் கோவிலில் முடி காணிக்கை செலுத்த வரும் பக்தர்களுக்கு வழங்கப்படும் பதிவுச்சீட்டில் மொட்டை அடிக்கும் தொழிலாளர்களின் புகைப்படத்துடன் கூடிய விவரத்தை அச்சிட்டு வழங்க அறநிலையத்துறை முடிவு செய்தது.

இதற்காக மொட்டை அடிக்கும் தொழிலாளர்களின் புகைப்படம், ஆதார் கார்டு நகல் ஆகியவற்றை பழனி கோவில் முடி மண்டபத்தில் வழங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று திருஆவினன்குடியில் உள்ள முடிக்காணிக்கை நிலையத்தில் மொட்டை அடிக்கும் தொழிலாளர்கள் திடீரென பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பக்தர்கள் அவதி

அப்போது பெயர், புகைப்படத்துடன் கூடிய பதிவுச்சீட்டு வழங்கும் நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மாதாந்திர ஊதியம் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். இந்த போராட்டத்தால் அங்கு மொட்டை அடிக்க வந்த பக்தர்கள் அவதி அடைந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த கோவில் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதனையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். சுமார் ¾ மணி நேரம் நடந்த இந்த போராட்டத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

-------

Tags:    

மேலும் செய்திகள்