சாஸ்தா கோவில் அணை நீர்மட்டம் உயர்வு
மலைப்பகுதியில் பெய்த தொடர்மழை காரணமாக சாஸ்தா கோவில் அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளத;
ராஜபாளையம்.
மலைப்பகுதியில் பெய்த தொடர்மழை காரணமாக சாஸ்தா கோவில் அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
சாஸ்தா கோவில் அணை
ராஜபாளையம் அருகே உள்ள தேவதானம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சாஸ்தா கோவில் அணை உள்ளது. இந்த அணையில் இருந்து தண்ணீரானது வாழவந்தான், நகர குளம், பெரியகுளம் கண்மாய் ஆகிய பகுதிகளுக்கு செல்கிறது. இதன் மூலம் எண்ணற்ற நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது.
இந்தநிலையில் சாஸ்தா கோவில் ஆற்றுப்பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர்மழையினால் அணையின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்தது. அதாவது மழை பெய்வதற்கு முன்பு 18 அடி இருந்த நீர்மட்டம் தற்போது 27 அடியாக உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தொடர்மழை
இதுகுறித்து விவசாயி அம்மையப்பன் கூறியதாவது:-
தேவதானம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் உருவாகும் நகரி ஆற்றில் இருந்து சாஸ்தா கோவில் அணைக்கு தண்ணீர் வருகிறது. பின்னா் இங்கிருந்து மற்ற கண்மாய்களுக்கு தண்ணீர் செல்கிறது. இந்த அணையை நம்பி தேவதானம், கோவிலூர், சேத்தூர், முத்துசாமியாபுரம், செட்டியாா்பட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர்.
இந்தநிலையில் மலைப்பகுதியில் பெய்த தொடர்மழையின் காரணமாக 36 அடி உயரம் கொண்ட இந்த அணையில் தற்போது 27 அடிக்கு தண்ணீர் உள்ளது.
விவசாயிகள் மகிழ்ச்சி
தொடர்மழையின் காரணமாக இந்த அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. இந்த அணை நிரம்பும் போது வாழவந்தான் கண்மாய், நகர குளம் மற்றும் பெரியகுளம் கண்மாய்க்கு நீர் திறந்து விடப்படுகிறது. இதனால் எண்ணற்ற விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர்.
தண்ணீர் வரத்து அதிகமானதால் மற்ற கண்மாய்களுக்கு தண்ணீர் செல்லும். அணையில் பாசனத்திற்கு தேவையான அளவு தண்ணீர் இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தங்களது பணிகளை செய்கின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.