சங்கர் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா
நெல்லை அருகே சங்கர் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா நடந்தது.
நெல்லை சங்கர்நகர் சங்கர் மேல்நிலைப்பள்ளியின் 66-வது ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் பிசினஸ் கன்சல்டண்ட் கா.சங்கர் காசி தலைமை தாங்கி பேசினார். பள்ளி செயலாளர் மற்றும் இந்தியா சிமெண்டு ஆலை முதுநிலை மேலாளர் (மனித வளம்) இரா.நாராயணசாமி வரவேற்றார். பள்ளி ஆண்டு அறிக்கையை தலைமை ஆசிரியர் கணேசன் வாசித்தார். ஆலை தலைவர் கோ.சரவணமுத்து தொடக்கவுரையாற்றினார். முதன்மை கல்வி அலுவலர் திருப்பதி சிறப்புரையாற்றினார்.
நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். கலைமாமணி கவிஞர் ஏர்வாடி எஸ். ராதாகிருஷ்ணன் இலக்கிய சிறப்புரையாற்றினார். பள்ளியில் 100 சதவீத தேர்ச்சி பெறவைத்த ஆசிரியர்களுக்கும், சிறப்பாக பணி செய்த சிறப்பு ஆசிரியர்களுக்கும், ஊக்குவித்த தலைமையாசிரியர் ஆகியோருக்கும் சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், மாநில, மாவட்ட அளவில் சாதனை படைத்த மாணவர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது.
தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முடிவில் உதவி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) உடையார் நன்றி கூறினார்.