சிவன் கோவில்களில் சனி பிரதோஷ வழிபாடு

சிவன் கோவில்களில் சனி பிரதோஷ வழிபாடு நடந்தது.

Update: 2022-11-05 19:05 GMT

ஐப்பசி மாத 2-வது பிரதோஷமும் சனிக்கிழமையில் வந்தது. இதனால் சிவன் கோவில்களில் நேற்று சனி பிரதோஷ சிறப்பு வழிபாடு நடந்தது. சனி பிரதோஷத்தையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் நந்தி பெருமானுக்கு நேற்று சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. சனி பிரதோஷத்தில் நந்தீஸ்வரரை வழிபட்டால் நல்லது நடக்கும் என்ற ஐதீகத்தால், சிவன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதில் பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் உள்ள நந்திகேஸ்வரருக்கு நேற்று மாலை பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட உற்சவர், ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் உள் பிரகாரத்தில் மூன்று முறை வலம் வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இதேபோல் இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோவில் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோவில், சு.ஆடுதுறையில் உள்ள குற்றம்பொறுத்தீஸ்வரர் கோவில், குரும்பலூர் பஞ்சநந்தீஸ்வரர் கோவில், வெங்கனூர் விருத்தாச்சலேஸ்வரர் கோவில், திருவாளந்துறை தோளீஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களில் உள்ள நந்தி பெருமானுக்கும், மூலவர் சிவனுக்கும் பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. சுவாமி புறப்பாடும் நடந்தது. அப்போது பக்தர்கள் பயபக்தியுடன் நந்தி பெருமானை வழிபட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்