சனி பிரதோஷம்-சிவன் கோவில்களில் பக்தர்கள் வழிபாடு
சனி பிரதோஷத்தையொட்டி சிவன் கோவில்களில் பக்தர்கள் வழிபட்டனர்
அலங்காநல்லூர்,
சனி பிரதோஷத்தையொட்டி சிவன் கோவில்களில் பக்தர்கள் வழிபட்டனர்.
சனி பிரதோஷம்
அலங்காநல்லூர் அய்யப்பன் கோவிலில் ஆனி மாத மகா சனி பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றது. அலங்காரநாதர், அலங்கார நாயகிக்கு மஞ்சள், சந்தனம், பால், பன்னீர், உள்ளிட்ட 16 வகை திரவியங்களாலும், வில்வம், அருகம்புல் உள்ளிட்ட பல வண்ண மலர்களாலும் பட்டர்களின் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு அபிஷேகமும், அர்ச்சனையும் நடந்தது. தொடர்ந்து தீப ஆராதனையும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீபம் ஏற்றி சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி சீனிவாசன் மற்றும் அலங்காநல்லூர் வட்டார அய்யப்ப, முருக பக்தர்கள் செய்திருந்தனர்.
இதேபோல் பாலமேடு சிவன் கோவிலிலும் பூஜைகள் நடந்தது. இங்கும் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
சனி மகாபிரதோஷத்தையொட்டி திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் உள்ள பால்சுனை கண்ட சிவபெருமான் தேங்காய் பூ அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
மேலூர்
மேலூரில் யூனியன் அலுவலகம் அருகே உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் சனி பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஆனி மாத சனிக்கிழமை மகாபிரதோஷத்தை முன்னிட்டு சுவாமிக்கும், நந்திக்கும் அலங்காரத்துடன் சிறப்பு பூஜை நடைபெற்றது. சுவாமிக்கும், நந்தி பெருமானுக்கும் எண்ணை காப்பு சாற்றி மஞ்சள், சந்தனம், தேன், பால், தயிர், பஞ்சாமிர்தம், திருநீறு உள்பட 16 வகை அபிஷேகங்களுடன் சிறப்பு பூஜை நடந்தது. காந்திநகர், குமார் நகர், மூவேந்தர்நகர், எஸ்.எம்.நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் வந்து வழிபட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த கோவில் அருகே உள்ள நவநீத கிருஷ்ணன் கோவில், மேலூர் நகரின் மையப்பகுதியில் உள்ள சிவன் கோவில், திருவாதவூரில் திருமறைநாதர் கோவில், தும்பைப்பட்டியில் கோமதி அம்பிகை சமேத சங்கர நாராயணனர் சாமி கோவில் ஆகிய கோவில்களிலும் சனி மகா பிரதோஷ சிறப்பு பூஜைகளுடன் வழிபாடுகள் நடைபெற்றன.
சனி மகா பிரதோஷத்தை முன்னிட்டு மதுரை பந்தடி 5-வது தெருவில் உள்ள ஆதி சிவன் சங்கு அலங்காரத்திலும், எஸ்.ஆலங்குளம், எஸ்.வி.பி. நகர் கற்பக விநாயகர் கோவிலில் சிவன் அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.