அறிவை வளர்க்கும் புத்தகத்தை பூட்டி வைக்கலாமா?

அறிவை வளர்க்கும் புத்தகத்தை பூட்டி வைக்கலாமா? என்று அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.;

Update:2022-09-28 00:15 IST

மூங்கில்துறைபட்டு, 

சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பொரசப்பட்டு கிராமத்தில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் நலன் கருதி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அங்கு நூலகம் கட்டப்பட்டது. அதனை அப்பகுதியை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ,மாணவிகள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்துதரப்பு மக்களும் பயன்படுத்தி வந்தனர்.

இந்தநிலையில் முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால் நூலக கட்டிடம் சேதமடைந்தது. இதையடுத்து நூலகம் பூட்டப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் தங்களது படிப்பு தொடர்பான புத்தகங்களை படிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு தொடர்பான தகவல்களையும், பொதுஅறிவு தொடர்பான புத்தகங்களை பொதுமக்களும் படிக்க முடியாமல் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். இது குறித்த புகாரின் பேரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நூலகம் சீரமைக்கப்பட்டது.

நடவடிக்கை

இருப்பினும் நூலகத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், எங்களை போன்ற ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் நூலகம் கட்டப்பட்டுள்ளது. இருப்பினும் அதனை சரியாக திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடு்க்காமல் அலட்சியமாக செயல்பட்டு வருகின்றனர். மக்களின் அறிவை வளர்க்கும் புத்தகங்களை யாருக்கும் பயனின்றி இப்படி நூலக கட்டிடத்தில் பூட்டி வைப்பது எந்த வகையில் சரியாகும். எனவே நூலகத்தை திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்