சக்தி முனீஸ்வரர் கோவில் தேரோட்டம்
கூடலூரில் சக்தி முனீஸ்வரர் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
கூடலூர்,
கூடலூரில் சக்தி முனீஸ்வரர் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
கோவில் திருவிழா
கூடலூர் எம்.ஜி.ஆர். நகரில் சக்தி முனீஸ்வரர்-துர்க்கை அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வருடாந்திர தேர்த்திருவிழா கடந்த 21-ந் தேதி தொடங்கியது. காலை 5 மணிக்கு மகா கணபதி ஹோமமும், சக்தி முனீஸ்வரர், முருகன், மகாலட்சுமி ஹோமங்களும், 9 மணிக்கு கொடியேற்றுதல் நடைபெற்றது.
தொடர்ந்து காப்பு கட்டி மூலவர் உள்பட பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக, அலங்கார சிறப்பு பூஜைகள் நடந்தது.மதியம் 12 மணிக்கு நந்தட்டி சிவன் கோவிலில் இருந்து பால் குடங்கள் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் பாலாபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது, இரவு 7 மணிக்கு கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர். 22-ந் தேதி காலை 6 மணிக்கு அபிஷேக, அலங்கார சிறப்பு பூஜை நடந்தது.
தேேராட்டம்
மாலை 6 மணிக்கு மாவிளக்கு மற்றும் முளைப்பாரி எடுத்து நந்தட்டி மாதேஸ்வரன், பூ மாரியம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. அங்கிருந்து முக்கிய வீதிகள் வழியாக பக்தர்கள் கோவிலை அடைந்தனர். பின்னர் சங்கு பூஜை நடைபெற்றது. நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு சிறப்பு பூஜை, தொடர்ந்து பல்வேறு விசேஷ பூஜைகள் நடந்தது.
இரவு 7 மணிக்கு மேளதாளங்கள் முழங்க அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் சக்தி முனீஸ்வரர் எழுந்தருளி தேரோட்டம் நடைபெற்றது. திருத்தேர் கோவிலில் இருந்து புறப்பட்டு துப்புக்குட்டி பேட்டை, பழைய பஸ் நிலையம் வழியாக சக்தி விநாயகர் கோவிலை அடைந்தது. அங்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, பின்னர் முக்கிய சாலைகள் வழியாக சென்று செவிடிப்பேட்டை, புதிய பஸ் நிலையம் உட்பட பல்வேறு சாலைகளில் சென்று மீண்டும் நேற்று அதிகாலையில் கோவிலை அடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தொடர்ந்து மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது.