கிரிவலப்பாதையில் நிழற்பந்தல்கள் அமைக்க வேண்டும்
திருவண்ணாமலையில் வெயில் கொளுத்தி வருவதால் கிரிவலப்பாதையில் கிரிவலம் செல்பவர்கள் வசதிக்காக நிழற்பந்தல்கள் அமைக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவண்ணாமலையில் வெயில் கொளுத்தி வருவதால் கிரிவலப்பாதையில் கிரிவலம் செல்பவர்கள் வசதிக்காக நிழற்பந்தல்கள் அமைக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அருணாசலேஸ்வரர் கோவில்
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது.
இக்கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக உள்ளது. இக்கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
மேலும் திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு பின்புறம் உள்ள பக்தர்களால் அண்ணாமலை என்று அழைக்கப்படும் மலையை சுற்றி மாதந்தோறும் பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் வந்து கிரிவலம் சென்று வருகின்றனர்.
இதில் கார்த்திகை தீபத் திருவிழாவில் மகா தீபம் ஏற்றப்படும் நாளன்றும், சித்ரா பவுர்ணமியன்றும் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவிலம் செல்வார்கள்.
பவுர்ணமி கிரிவலம்
கொரோனாவிற்கு பின்னர் வந்த பவுர்ணமி நாட்களில் திருவண்ணாமலையில் கடந்த காலங்களை விட அதிகமான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.
இந்த மாதத்திற்கான பவுர்ணமி வருகிற 5-ந் தேதி (புதன்கிழமை) காலை 10.17 மணியளவில் தொடங்கி மறுநாள் (வியாழக்கிழமை) காலை 10.58 மணிக்கு நிறைவடைகிறது. இந்த மாதத்திற்கான பவுர்ணமியின் போது வழக்கம் போல் லட்சணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்ல வருவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே திருவண்ணாமலையில் வெயில் கொளுத்தி வருகிறது. பகல் நேரத்தில் வீட்டில் இருந்து வெளியில் செல்ல முடியாத அளவிற்கு வெயிலின் அளவு அதிகமாக காணப்படுகிறது.
இன்னும் நாட்கள் செல்ல, செல்ல வெயிலின் அளவு அதிகரிக்கவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
நிழற்பந்தல்கள் அமைக்க வேண்டும்
இந்த மாதத்திற்கான பவுர்ணமி பெரும்பாலும் பகல் நேரத்தில் வருவதால் கிரிவலம் செல்லும் பக்தர்களில் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பில் கிரிவலப்பாதையில் ஆங்காங்கே பக்தர்கள் வெயிலின் தாக்கத்தில் இருந்து இளைப்பாறுவதற்கு நிழற்பந்தல்கள், தண்ணீர் பந்தல்கள் அமைக்க வேண்டும் என்று பக்தர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் பவுர்ணர்மி நாட்களில் கிரிவலப்பாதையில் உள்ள நடைபாதையில் பக்தர்கள் நடந்து செல்ல முடியாத அளவிற்கு கடைகள் அமைக்கப்பட்டு ஆக்கிரமிப்புகள் செய்யப்படுகிறது.
இதனால் கிரிவலம் செல்லும் பக்தர்கள் சாலையில் நடந்து செல்கின்றனர். ஆம்புலன்சு, போலீசாரின் வாகனங்கள் அவசரத்திற்கு வேகமாக செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.
எனவே இது குறித்தும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.