மாணவிக்கு பாலியல் தொல்லை: ஆசிரியருக்கு 5 ஆண்டுகள் சிறை
மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பள்ளி ஆசிரியருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.;
பாலியல் தொல்லை
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் சீனியப்பா (வயது 58). அரசு பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றிய இவர் 6-ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இது தொடர்பாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு அலுவலர் சசி ஆலங்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் ஆசிரியர் சீனியப்பாவை கைது செய்தனர்.
5 ஆண்டுகள் சிறை
இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை நிறைவடைந்தது. இதையடுத்து நீதிபதி (பொறுப்பு) ஜெயந்தி நேற்று தீர்ப்பு வழங்கினார். இதில் சீனியப்பாவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.