மாணவனுக்கு பாலியல் தொல்லை; ஆசிரியர் கைது

இரணியல் அருகே மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 2 மாதம் தலைமறைவாக இருந்த ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-08-24 18:45 GMT

குளச்சல்:

இரணியல் அருகே மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 2 மாதம் தலைமறைவாக இருந்த ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.

மாணவனுக்கு பாலியல் தொல்லை

இரணியல் அருகே உள்ள ஒரு அரசு மேல்நிலைப்பள்ளியில் அருள் ஜீவன் (வயது 47) என்பவர் இயற்பியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

கடந்த ஜூன் மாதம் 14-ந் தேதி அன்று 13 வயதான 8-ம் வகுப்பு மாணவனை அவர் அறிவியல் ஆய்வகத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. மேலும் ஆசிரியர் அத்துமீறியதால் மாணவனுக்கு காயமும் ஏற்பட்டுள்ளது.

பின்னர் வீட்டுக்கு சென்ற மாணவன், தனது தந்தையிடம் ஆசிரியர் செய்த செயலை கூறி கதறி அழுதார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் குளச்சல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். மேலும் சிகிச்சைக்காக மாணவன் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

ஆசிரியர் கைது

இந்த குற்றச்சாட்டு தொடர்பாக இன்ஸ்பெக்டர் சங்கீதா அன்பு ஜூலியட் பாதிக்கப்பட்ட மாணவன் மற்றும் சம்பந்தப்பட்ட அரசு பள்ளியில் விசாரணை நடத்தினார்.

இதில் ஆசிரியர் அருள் ஜீவன் மாணவனிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து போக்சோ பிரிவு உள்பட 5 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதனை அறிந்ததும் அருள் ஜீவன் தலைமறைவானார்.

இதற்கிடையே மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன் ஆசிரியர் அருள் ஜீவனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

இந்தநிலையில் தலைமறைவாக இருந்த ஆசிரியர் அருள்ஜீவனை 2 மாதங்களுக்கு பிறகு நேற்று மகளிர் போலீசார் கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்