சிறுமிக்கு பாலியல் தொல்லை; முதியவருக்கு 20 ஆண்டு சிறை
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து நெல்லை போக்சோ சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள மாவடி வேத கோவில் தெருவை சேர்ந்தவர் முருகாண்டி என்ற பால்ராஜ் (வயது 67), விவசாயி. இவர் கடந்த 2020-ம் ஆண்டு ஒரு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதுகுறித்து அந்த சிறுமியின் பெற்றோர் நெல்லை ஊரக அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, முருகாண்டியை கைது செய்தனர்.
பின்னர் அவர் மீது நெல்லை போக்சோ சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட முருகாண்டிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.