சிறுமிக்கு பாலியல் தொல்லை; வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து கரூர் மகளிர் விரைவு நீதிமன்றம் உத்தரவிட்டது.
கைது
கரூர் மாவட்டம், குப்பம் பகுதியை சேர்ந்தவர் வசந்தகுமார்(வயது 22). கூலித்தொழிலாளி. இவர் 10-ம் வகுப்பு படித்த 15 வயது சிறுமியை கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் 21-ந்தேதி இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு அழைத்து சென்று, அங்கு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும் இதுகுறித்து யாரிடமாவது சொன்னால் கொலை செய்துவிடுவேன் என சிறுமியை மிரட்டியுள்ளார். பின்னர் இதுசம்பந்தமாக சிறுமி கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19-ந் தேதி க.பரமத்தி ஊரக அனைத்து மகளிர் போலீஸ்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வசந்தகுமாரை கைது செய்தனர்.
20 ஆண்டுகள் சிறை
இந்த வழக்கு தொடர்பான விசாரணை கரூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் விசாரணை முடிந்து இவ்வழக்கில் நீதிபதி நசீமா பானு நேற்று தீர்ப்பு வழங்கினார். இந்த தீர்ப்பில், சிறுமியை கடத்திய குற்றத்திற்காக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.1,000 அபராதமும், அபராதம் செலுத்த தவறினால் மேலும் ஓராண்டு சிறைத்தண்டனையும், வழிமறித்த குற்றத்திற்காக ஓராண்டு சிறைத்தண்டனையும், கொலை மிரட்டல் விடுத்ததற்காக 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.1,000 அபராதமும், அபராதம் செலுத்த தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறைத்தண்டனையும், போக்சோ சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், மேலும் ரூ.1,000 அபராதமும், அபராதம் செலுத்த தவறினால் மேலும் ஓராண்டு சிறைத்தண்டனையும் வழங்கி தீர்ப்பளித்தார். மேலும் இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக ரூ.3 லட்சம் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.