கணவருடன் பழகிய பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு
வேலூர் அருகே கணவருடன் பழகிய பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் மனைவி உள்பட 6 பேர்மீது வழக்குப்பதிவு செய்து, 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
குடும்ப பிரச்சினை
வேலூர் வேலப்பாடியை சேர்ந்தவர் பானு (வயது 30). இவரது கணவர் இறந்து விட்டார். இந்த நிலையில் அவருக்கும், சாத்துமதுரையை சேர்ந்த சதீஷ் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. சதீஷ்க்கு ஏற்கனவே திருமணமாகி ஜெயசித்ரா என்ற மனைவி உள்ளார். இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பானு மற்றும் சதீஷ் ஆகியோரது விவகாரம் ஜெயசித்ராவுக்கு தெரியவந்துள்ளது. இதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்து கணவரை கண்டித்ததாக தெரிகிறது. இதனால் அவர்களுக்குள் குடும்பத்தில் பிரச்சினையும் ஏற்பட்டு வந்துள்ளது.
சம்பவத்தன்று ஜெயசித்ரா மற்றும் அவரது தரப்பை சேர்ந்த சந்துரு, ஈஸ்வரன், ஆகாஷ், விஜய், ராமு ஆகியோர் பானுவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அந்த பெண்ணுக்கு ஜெயசித்ராவின் தரப்பினர் பாலியல் தொந்தரவும், மிரட்டலும் விடுத்து வந்துள்ளனர்.
2 பேர் கைது
இதுகுறித்து பானு வேலூர் தெற்கு போலீசில் புகார் செய்துள்ளார். அதன்பேரில் ஜெயசித்ரா உள்பட 6 பேர் மீது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காஞ்சனா வழக்குப்பதிவு செய்து ஜெயசித்ரா மற்றும் ஈஸ்வரனை கைது செய்தார். மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.