பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு: விழுப்புரம் கோர்ட்டில் கள்ளக்குறிச்சி போலீஸ்காரர் சாட்சியம்
பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் விழுப்புரம் கோர்ட்டில் கள்ளக்குறிச்சி போலீஸ்காரர் சாட்சியம் அளித்தாா்.
பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கின் புகார்தாரரான பெண் ஐ.பி.எஸ். அதிகாரியிடம் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. தரப்பு வக்கீல் குறுக்கு விசாரணையை நிறைவு செய்ததை தொடர்ந்து இவ்வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளிடம் தற்போது விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு ஆகிய இருவரும் ஆஜராகவில்லை. அவர்களது தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், அவர்கள் வராதது குறித்து மனு தாக்கல் செய்ததை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. தொடர்ந்து அரசு தரப்புசாட்சி விசாரணை தொடங்கி நடைபெற்றது. இதில், கள்ளக்குறிச்சி மாவட்டம் கரியாலூர் போலீஸ் நிலைய காவலர் கணபதி நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அதை நீதிபதி பதிவு செய்துகொண்டார். தொடர்ந்து அவரிடம் எதிர் தரப்பு வக்கீல்கள் குறுக்கு விசாரணை நடத்தினர். பின்னர் வழக்கு விசாரணையை 1-ந்தேதிக்கு (அதாவது நாளை மாறுநாள்) ஒத்திவைத்து நீதிபதி புஷ்பராணி உத்தரவிட்டார்.