அலையாத்திக்காட்டில் தமிழ் வாழ்க எழுத்து வடிவில் வாய்க்கால் அமைப்பு

அலையாத்திக்காட்டில் தமிழ் வாழ்க எழுத்து வடிவில் வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது.

Update: 2024-08-27 18:00 GMT

சென்னை,

தமிழ்நாட்டின் மிகப்பெரிய அலையாத்தி காடுகள் அமையப்பெற்ற இடம் முத்துப்பேட்டை. அலையாத்தி தாவரம் கடற்கரை ஓரங்களில் உள்ள சேறு கலந்த சதுப்பு நிலத்திலும் உவர் நீரில் வளரக்கூடியது. பல்வேறு நீர்வாழ் உயிரினங்களின் உற்பத்தி இடமாகவும் கடற்கரையோர பகுதிகளுக்கு பாதுகாப்பு அரணாகவும் சதுப்பு நில காடுகள் அமைந்துள்ளன.

தற்போது ஏற்பட்டு வரும் சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் காலநிலை மாற்றத்தை சீர் செய்வதில் அலையாத்தி காடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. வனத்துறை மூலம் முத்துப்பேட்டை வனப்பகுதியில் அலையாத்தி காடுகளை உருவாக்குவதற்கும் புனரமைக்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது .

வாய்க்கால்களின் ஒரு பகுதியில் உவர் நீரும் மற்றொரு பகுதியிலிருந்து ஆற்று நீரும் கலக்கப்பட்டு கடல் நீரில் உவர் தன்மையினை குறைத்து அலையாத்தி காடுகள் உருவாக வகை செய்யப்படுகிறது. இ்ந்தநிலையில் மீன் முள் வடிவ வாய்க்காலைத் தவிர தமிழ் மொழிக்கு பெருமை சாற்றும் வகையில் 'தமிழ் வாழ்க' என்ற எழுத்துகள் வடிவில் வாய்க்கால்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த வடிவமைப்பில் ஒவ்வொரு எழுத்தும் சராசரியாக 130 மீட்டர் நீளம், 65 மீட்டர் அகலத்திலும் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ் வாழ்க என்ற வடிவமைப்பின் மொத்த வாய்க்கால்களின் நீளம் 3962 மீட்டர் ஆகும். இந்த வாய்க்காலில் அபிசீனியா, மெரினா எனப்படும் கருங்கண்டல் வகையான அலையாத்தி செடிகள் நடப்பட்டுள்ளன.

அடுத்த 5 ஆண்டுகளில் மொத்தம் 50 ஹெக்டேர் நிலப்பரப்பில் அலையாத்திக்காடுகள் உருவாகி வரும்போது அதில் உள்ள இந்த 'தமிழ் வாழ்க' எனும் எழுத்து மிகவும் தனித்துவமாக தெரியும். தமிழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ள இந்த தனித்துவமான வாய்க்கால் வடிவமைப்பு தமிழ் ஆர்வலர்கள், மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்