ரூ.1¼ கோடியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், தார் சாலைகள்
சு.பள்ளிப்பட்டு, ஆதியூர் ஊராட்சிகளில் ரூ.1¼ கோடியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், தார் சாலைகள் அமைக்கும் பணியை கலெக்டர் பாஸ்கர பாண்டியன், நல்லதம்பி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தனர்.
சுத்திகரிப்பு நிலையம்
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஊராட்சி ஒன்றியம் சு.பள்ளிப்பட்டு ஊராட்சியில் ஸ்வச் பாரத் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.43 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படுகிறது. சு.பள்ளிப்பட்டு ஊராட்சியில் முதல்-அமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாடு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பகுதி 2-ல் ரூ.38.48 லட்சத்தில் 1.6 கி.மீ. நீளத்திற்கு தார் சாலை அமைக்கப்பட இருக்கிறது.
அதேபோன்று மொளகரம்பட்டி முதல் கீழ்குரும்பர் தெரு வரை 1 கி.மீ. நீளத்திற்கு ரூ.29 லட்சத்து 80 ஆயிரத்தில் தார் சாலை, ஆதியூர் முதல் தங்கபுரம் சாலை வரை 400 மீட்டர் நீளத்திற்கு ரூ12.66 லட்சத்தில் தார் சாலை, மின் நகர் பகுதியில் கே.டி.ரோடு முதல் இ.பி.நகர் வரை ரூ.14.54 லட்டத்தில் 450 மீட்டர் நீளத்திற்கு தார் சாலை அமைக்கப்படுகிறது.
ரூ.1 கோடியில் சாலை
மொத்தம் ரூ.1 கோடியில் சாலை அமைக்கும் பணிக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன், ஏ.நல்லதம்பி எம்.எல்.ஏ. ஆகியோர் பூமி பூஜை போட்டு பணிகளை தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் நேரு, ஒன்றிய பொறியாளர் சரவணன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் கே.ஏ. குணசேகரன், கே.எஸ்.ஏ.மோகன்ராஜ், ஒன்றியக் குழு தலைவர் திருமதி, ஊராட்சி மன்ற தலைவர் சைனம்மாள் சுப்பிரமணி, ஒன்றிய கவுன்சிலர் பூபதி, உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நடராஜன் நன்றி கூறினார்.