நடைபாதையில் வழிந்தோடும் கழிவுநீர்;துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் முகம் சுழிப்பு

ஊட்டி மார்க்கெட் பகுதியில் கால்வாயில் ஏற்பட்ட அடைப்பால், நடைபாதையில் கழிவுநீர் வழிந்தோடுகிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதால் பொது மக்கள் முகம் சுழிக்கின்றனர்.

Update: 2023-01-28 18:45 GMT

ஊட்டி, 

ஊட்டி மார்க்கெட் பகுதியில் கால்வாயில் ஏற்பட்ட அடைப்பால், நடைபாதையில் கழிவுநீர் வழிந்தோடுகிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதால் பொது மக்கள் முகம் சுழிக்கின்றனர்.

நகராட்சி மார்க்கெட்

ஆங்கிலேயர் காலத்தில் கட்டமைக்கப்பட்ட ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் காய்கறி, மளிகை, பழங்கள், துணி, நகை, இறைச்சி உள்பட 1,500 நிரந்தர கடைகளும், 500 தற்காலிக கடைகளும் உள்ளன. இந்த மார்க்கெட்டுக்கு தினமும் 3,500 பேர் முதல் 4,000 வாடிக்கையாளர்கள் வந்து செல்கின்றனர். மேலும் வார இறுதி நாட்களில் 4,000 முதல் 5,000 வாடிக்கையாளர்கள் வருவார்கள்.

இதேபோல் நீலகிரி மாவட்டத்தில் அறுவடை செய்யப்படும் மலை காய்கறிகள் ஊட்டி நகராட்சி மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். பின்னர் ஏலம் விடப்பட்டு, சரக்கு வாகனங்களில் கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. இங்கு காலை முதல் மாலை வரை பொதுமக்கள் நடமாட்டம் எப்போதும் அதிகமாக இருக்கும்.

கழிவுநீர் கால்வாயில் அடைப்பு

இந்தநிலையில் மார்க்கெட்டை ஒட்டியுள்ள மணிக்கூண்டு பகுதியில் பொதுமக்கள் நடந்து செல்வதற்காக நடைபாதை அமைக்கப்பட்டு உள்ளது. அதன் அடிப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் செல்கிறது. இந்தநிலையில் நேற்று கழிவுநீர் குழாயில் அடைப்பு ஏற்பட்டது. இதனால் கழிவுநீர் சாலை மற்றும் நடைபாதையில் ஆறாக ஓடியது. இதன் காரணமாக கடும் துர்நாற்றம் வீசுகிறது.

அந்த வழியாக நடந்து சென்ற பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் முகம் சுழித்தனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

பழமையான மார்க்கெட்டாக இருந்தாலும், பலத்த மழை பெய்யும் சமயங்களில் எல்லாம் கடைகள் மற்றும் வளாகங்களில் வெள்ளம் தேங்கி நிற்கிறது. மழைநீர் செல்லும் வடிகாலில் அடைப்பு ஏற்படுவதால் இதே நிலை தொடர்கிறது.

இதில் தற்போது கழிவுநீர் கால்வாயும் சேர்ந்து விட்டது. இந்த இடத்தில் மாதம் 3 முறை அடைப்பு ஏற்படுகிறது. இதனால் அந்த பகுதியில் நடந்து செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. மார்க்கெட்டின் பல்வேறு இடங்களிலும் இதேபோல் கழிவுநீர் அடைப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த பிரச்சினையை தீர்க்க நகராட்சி நிர்வாகம் நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். கால்வாய்களை சரிசெய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்