கவுசிகமா நதியில் கழிவுநீர் கலக்கும் நிலை

ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ள கவுசிகமா நதியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

Update: 2022-06-01 19:13 GMT

விருதுநகர்,

ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ள கவுசிகமா நதியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

கவுசிகமா நதி

விருதுநகர் அருகே வடமலைக்குறிச்சியிலிருந்து மழைக்காலங்களில் கண்மாய் உபரிநீர்ஆறாக பெருக்கெடுத்து கவுசிகமா நதியாக விருதுநகர் மைய பகுதி வழியாக குல்லூர்சந்தைஅணையை சென்றடைகிறது. இந்த நதியின் கரையை பலப்படுத்த கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பொதுப்பணித்துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்த போதிலும் அதனை முறையாக செய்யாத நிலையில் நதியின் கரைகள் பலம் இழந்த நிலையில் ஆக்கிரமிப்புகளும் அதிகரித்து விட்டன.

மேலும் நதியின் நீர் ஓடும் பாதையில் கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ள நிலையில் நதியின் இரு புறமும் பிற ஆக்கிரமிப்புகளும் அதிகரித்து விட்டன.

பாதாள சாக்கடை திட்டம்

ஆனாலும் பொதுப்பணித்துறையினர் இதுகுறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையே நீடிக்கிறது. விருதுநகர் பாதாள சாக்கடைதிட்டத்தில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் முறையாக செயல்படாததால் பாதாள சாக்கடை கழிவுநீர் கவுசிகமா நதியில் விடப்படுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும், பொதுப்பணித்துறையினரும் நகரசபை நிர்வாகத்திடம் முறையிட்டும் இதுவரை கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்காத நிலை நீடிக்கிறது.

நகரில் சுகாதாரத்தை பேணி காக்க வேண்டிய நகரசபை நிர்வாகம் நதியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுப்பதை தாமதப்படுத்துவது ஏற்புடையது அல்ல. எனவே உடனடியாக பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் முறையாக செயல்பட நகரசபை நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

அவசியம்

மேலும் பொதுப்பணித்துறையினர் கவுசிகமாநதியில் உள்ள கருவேல மரங்களின் ஆக்கிரமிப்புகள் உள்ளிட்ட பிற ஆக்கிரமிப்புகளையும் அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியதும் அவசியமாகும்.

மாவட்ட நிர்வாகமும் நகரின் மையப்பகுதியில் உள்ள நதியில் இம்மாதிரியான சுகாதார சீர்கேடு மற்றும் ஆக்கிரமிப்புகள் ஏற்பட்டுள்ளதை தவிர்க்க சம்பந்தப்பட்ட துறையினர் உடனடி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்த வேண்டியதும் அவசியமாகும்.

Tags:    

மேலும் செய்திகள்