பாதாள சாக்கடை உடைப்பு ஏற்பட்ட பகுதியில் கழிவுநீர் அகற்றம்

பொதுமக்கள் மறியல் செய்ய முயற்சி: பாதாள சாக்கடை உடைப்பு ஏற்பட்ட பகுதியில் கழிவுநீர் அகற்றம் நகரமன்ற தலைவர் நடவடிக்கை

Update: 2022-11-10 18:45 GMT

விழுப்புரம்

விழுப்புரம் நகராட்சி 19-வது வார்டுக்குட்பட்ட கிருஷ்ணப்ப நாயக்கர் தெருவில் பாதாள சாக்கடை குழாயில் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் அங்குள்ள வீதியில் வழிந்தோடியது. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசியதால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். இதுகுறித்து அவர்கள் நகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்காததால் பொதுமக்கள் திடீரென அங்குள்ள மெயின்ரோட்டுக்கு திரண்டு வந்து சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். உடனே போலீசார் விரைந்து சென்று அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்த தகவல் அறிந்ததும் நகராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி, அப்பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் பாதாள சாக்கடை உடைப்பை சரிசெய்து கழிவுநீரை அகற்றும்படி நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து நகர்நல அலுவலர் பாலசுப்பிரமணியன் தலைமையில் ஊழியர்கள் அங்கு விரைந்து சென்று உடைப்பு ஏற்பட்ட பகுதியில் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் அப்பகுதிகளில் கழிவுநீரை அகற்றி ஜே.சி.பி. எந்திரம் மூலம் சாக்கடை கால்வாயையும் தூர்வாரி அடைப்புகளை சரிசெய்தனர். இப்பணிகளை நகரமன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பார்வையிட்டு, நிரந்தர தீர்வு காணும் வகையில் வாய்க்கால் அமைக்கும்படி அறிவுறுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்