30 வீடுகளில் கடும் விரிசல்

கூடலூரில் 30 வீடுகளில் கடும் விரிசல் ஏற்பட்டு உள்ளது. மேலும் சுவர்கள் நிலத்தில் புதைந்ததால் மக்கள் அச்சமடைந்து உள்ளனர்.

Update: 2022-08-16 14:23 GMT

கூடலூர், 

கூடலூரில் 30 வீடுகளில் கடும் விரிசல் ஏற்பட்டு உள்ளது. மேலும் சுவர்கள் நிலத்தில் புதைந்ததால் மக்கள் அச்சமடைந்து உள்ளனர்.

வீடுகளில் விரிசல்

கூடலூர் பகுதியில் ஆண்டுதோறும் ஜூன் தொடங்கி நவம்பர் மாதம் வரை தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. கடந்த 15 நாட்களாக தொடர் கனமழை பெய்தது. இதனால் மண்சரிவு மற்றும் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதேபோல் மின்கம்பங்களும் சேதம் அடைந்ததால் மின்சார வினியோகம் பாதித்தது. மழையின் தாக்கமும் நாளுக்கு நாள் அதிகரித்ததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதேபோல் ஓவேலி, கூடலூர் உள்பட பல இடங்களில் வீடுகள் இடிந்து விழுந்தது. இந்தநிலையில் மழையின் தாக்கம் குறைந்து காணப்படுகிறது. இதனிடையே மழை குறைந்தாலும் பாதிப்பு தொடர்கிறது. கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட நடு கூடலூர் பகுதியில் நூற்றுக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள வீடுகளின் சுவர்கள் இரண்டாக பிளக்கும் வகையில் கடும் விரிசல் ஏற்பட்டு உள்ளது.

மண்ணுக்குள் புதைகிறது

இதேபோல் சுமார் 30-க்கும் மேற்பட்ட வீடுகள் எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் திடீரென விரிசல் ஏற்பட்டு உள்ளது. சில வீடுகள் மண்ணுக்குள் புதையும் அபாயத்தில் உள்ளது. மேலும் வீடுகளில் உள்ள கழிப்பறை நீர் தேக்க தொட்டிகள், சில இடங்களில் சுற்றுச்சுவர்கள் மண்ணுக்குள் புதைந்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் வீடுகளில் தங்க முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் எந்த நேரத்திலும் நிலச்சரிவு ஏற்படும் என்ற பீதியில் உள்ளனர்.இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, தொடர் கனமழையால் நிலச்சரிவு ஏற்படும் வகையில் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. தற்போது மழை குறைந்தாலும் இனி வரும் நாட்களும் மழைக்காலம் என்பதால் சேதம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே, அதிகாரிகள் ஆய்வு நடத்தி பேரிடர் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்