செயற்கையாக உரத்தட்டுப்பாடு ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கை
சீர்காழி பகுதியில் செயற்கையாக உரத்தட்டுப்பாடு ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண்மை இணை இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சீர்காழி:
சீர்காழி பகுதியில் செயற்கையாக உரத்தட்டுப்பாடு ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண்மை இணை இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மழையால் பாதிப்பு
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரே நாளில் விடிய விடிய 22 சென்டி மீட்டர் மழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக சீர்காழி பகுதியில் பல்வேறு இடங்களில் தாழ்வான பகுதிகளில் நடவு செய்யப்பட்ட சம்பா நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கின. வயல்களில் தற்போது மழைநீர் வடிய தொடங்கி உள்ளது.மழையால் பாதிக்கப்பட்ட சம்பா நெற்பயிர்களை காப்பாற்ற விவசாயிகள் உரங்களை தெளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் தனியார் உரைக்கடை உரிமையாளர்கள் யூரியா, பொட்டாஷ் உள்ளிட்ட உரங்கள் இருப்பு இல்லை என்றும், இணை உரங்கள் வாங்கினால் தான் உரங்கள் வழங்கப்படும் என கூறி செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்தி வருவதாக விவசாயிகள் வேளாண் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர்.
உர இருப்பு பட்டியல்
இதையடுத்து மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சேகர் நேற்று சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில் உள்ளிட்ட இடங்களில் உள்ள உரக்கடைகளுக்கு நேரில் சென்று உரங்களின் இருப்பு குறித்த விவரங்களை கேட்டறிந்தார். தொடர்ந்து கடையில் உள்ள உர இருப்பு பட்டியலையும் ஆய்வு செய்தார்.அப்போது அவர் கூறுகையில், 'மயிலாடுதுறை மாவட்டத்தில் தேவையான அளவிற்கு உரங்கள் கையிருப்பில் உள்ளது. செயற்கையான முறையில் உரத்தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் கடை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்து விவசாயிகள் புகார் செய்தால் சம்பந்தப்பட்ட நபர்களின் கடை உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆய்வு பணிகள்
மேலும் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு சரக்கு ரெயில்கள் மூலம் 600 டன் உரம் வந்துள்ளது. இந்த உரம் அனைத்து பகுதிகளிலும் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. தினமும் வேளாண் துறை சார்பில் அனைத்து உரக்கடைகளிலும் தொடர்ந்து ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்படும்' என்றார். ஆய்வின் போது வேளாண்மை உதவி இயக்குனர்கள் சீர்காழி ராஜராஜன், கொள்ளிடம் எழில் ராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.