மக்கள் நீதிமன்றத்தில் 777 வழக்குகளுக்கு தீர்வு

ஊட்டியில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 777 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

Update: 2023-05-13 18:45 GMT

ஊட்டி

ஊட்டியில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 777 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

லோக் அதாலத்

மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் ஆணைப்படி நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் லோக் அதாலத் என்ற தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், மாவட்ட நீதிபதியுமான முருகன் தலைமை தாங்கினார்.

இதில் காசோலை மோசடி வழக்குகள், சொத்து சம்பந்தமான வழக்குகள், தொழிலாளர் சம்பந்தமான பிரச்சினைகள், வங்கி வழக்குகள், வாரா கடன் வழக்குகள், தேசிய வங்கிகளில் வாராக்கடன், குடும்ப பிரச்சினை சம்பந்தமான வழக்குகள் என நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள 1,000-க்கும் மேலான வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

ரூ.6 கோடிக்கு சமரசம்

இதில் நீதிபதிகளும், வழக்கறிஞர்களும், வழக்காடிகளும் சமரச முறையில் பேசி ரூ.5 கோடியே 97 லட்சத்து 56 ஆயிரத்து 498 மதிப்பில் 777 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன.

முன்னதாக மாவட்ட நீதிபதி முருகன் கூறுகையில், மக்கள் நீதிமன்றத்தில் வழக்குகள் சமரச முறையில் தீர்வு காணப்படுகிறது. இதன் மூலம் முடிக்கப்படும் வழக்குகளில் முத்திரைதாள் மூலம் செலுத்திய கட்டணம் திரும்ப கிடைக்கும். மேலும் நேரம், பண விரயம், மன உளைச்சல் தவிர்க்கப்படுகிறது. எனவே இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.

கூடலூரில் நீதிபதி முகமது அன்சாரி, பந்தலூரில் நீதிபதி சிவக்குமார், கோத்தகிரியில் நீதிபதி வனிதா, குன்னூரில் நீதிபதி சந்திரசேகரன் தலைமையில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்