2 ஆயிரத்து 402 வழக்குகளுக்கு தீர்வு

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் மக்கள் நீதிமன்றத்தின் மூலம் 2 ஆயிரத்து 402 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

Update: 2022-08-13 17:29 GMT

மக்கள் நீதிமன்றம்

தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் வழக்குகளுக்கு விரைந்து தீர்வு காணும் வகையில் நேற்று மாநில அளவிலான மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில் திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை திண்டுக்கல், பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வேடசந்தூர், நத்தம், நிலக்கோட்டை நீதிமன்றங்களில் 9 அமர்வு மூலம் மக்கள் நீதிமன்றம் நடந்தது

இதில் திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்துக்கு மாவட்ட நீதிபதி லதா தலைமை தாங்கினார். கூடுதல் மாவட்ட நீதிபதி சரவணன், குடும்பநல நீதிபதி விஜயகுமார், சிறப்பு கோர்ட்டு நீதிபதி ஜான்மினோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு மோகனா, சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் பாரதிராஜா மற்றும் நீதிபதிகள், மாஜிஸ்திரேட்டுகள் வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

வழக்குகள் தீர்வு

இதில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் இழப்பீடு கோரும் வழக்கு, வங்கி வராக்கடன் வழக்கு, காசோலை மோசடி வழக்கு, குடும்ப நல வழக்கு உள்ளிட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. இதற்காக வழக்கில் தொடர்புடைய இருதரப்பினரும் நேரில் வரவழைக்கப்பட்டு சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு சுமுக தீர்வு காணப்பட்டது.

அந்த வகையில் மாவட்டம் முழுவதும் நேற்று மொத்தம் 2 ஆயிரத்து 402 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன. அதன்மூலம் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு ரூ.11 கோடியே 60 லட்சத்து 673 இழப்பீடாக வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்