மக்கள் நீதிமன்றத்தில் 107 வழக்குகளுக்கு தீர்வு

விழுப்புரம் கோர்ட்டில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 107 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

Update: 2023-07-08 18:45 GMT

இம்முகாமிற்கு மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியும் சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் மாவட்ட தலைவருமான பூர்ணிமா தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். முதன்மை சார்பு நீதிபதி பஷீர், எஸ்.சி.எஸ்.டி. சிறப்பு நீதிமன்ற நீதிபதி பாக்யஜோதி, கூடுதல் மாவட்ட நீதிபதி ராஜசிம்மவர்மன், மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி வெங்கடேசன், மகளிர் நீதிமன்ற நீதிபதி ஹெர்மேஸ், தலைமை குற்றவியல் நீதிபதி புஷ்பராணி, மாவட்ட உரிமையியல் நீதிபதி சுபத்ரா, மாஜிஸ்திரேட்டு அகிலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூடுதல் சார்பு நீதிபதி தமிழ்செல்வன், அனைவரையும் வரவேற்றார். அரசு வக்கீல் நடராஜன், வக்கீல் சங்கத் தலைவர் தயானந்தம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

நீதி என்பது வீடு தேடி வர வேண்டும்

நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பூர்ணிமா பேசுகையில், ஒவ்வொரு வழக்கிலும் நீதி என்பது வீடு தேடி வர வேண்டும். இதற்காகத்தான் சட்டப்பணிகள் ஆணைக்குழு செயல்பட்டு வருகிறது. கடந்த 4 மக்கள் நீதிமன்றத்தில் 7,733 வழக்குகள் சமரசமாக முடிக்கப்பட்டு ரூ.69 கோடியே 76 லட்சத்து 24 ஆயிரத்து 936-க்கு தீர்வு காணப்பட்டுள்ளது. நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு, மக்கள் நீதிமன்றத்தின் மூலம் விரைவாக தீர்வுகள் கிடைக்கும் வகையில் சட்டப்பணிகள் ஆணைக்குழு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

107 வழக்குகளுக்கு தீர்வு

இம்முகாமில் விபத்துகள் தொடர்பான வழக்குகள், காசோலை வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு சமரசமாக விசாரிக்கப்பட்டது. அதுபோல் ஏற்கனவே நிலுவையில் உள்ள வழக்குகளை தவிர புதிதாக தாக்கல் செய்ய தகுதியுடைய வழக்குகள் மற்றும் பிரச்சினைகளுக்கும் சமரச முறையில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் நீதிபதிகள், ஓய்வுபெற்ற நீதிபதிகள், வக்கீல்கள், சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுப்பினர்கள் ஆகியோர் அடங்கிய குழுவினர், வழக்குகளுக்கு சமரச அடிப்படையில் தீர்வு கண்டனர்.

இம்முகாமில் 1,400-க்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இதன் முடிவில் 107 வழக்குகள் சமரசமாக முடிக்கப்பட்டு ரூ.3 கோடியே 5 லட்சத்து 96 ஆயிரத்து 815-க்கு தீர்வு காணப்பட்டது. முகாமிற்கான ஏற்பாடுகளை சட்டப்பணிகள் ஆணைக்குழு நிர்வாக உதவியாளர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்