குடிசைக்கு தீ வைப்பு; 3 பேருக்கு வலைவீச்சு
களக்காடு அருகே குடிசைக்கு தீ வைத்த 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
களக்காடு:
களக்காடு அருகே கேசவநேரி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் கணேசன் மகன் சுடலைகுமார் (வயது 31). இவர் தனது வீட்டில் குடிசை அமைத்து அதில் ருத்திரகாளியம்மன் கோவில் அமைத்து வழிபட்டு வருகிறார். இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த சுப்பையா மகன் மகேஷ் என்ற சின்னகரடிக்கும் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது.
இந்த நிலையில் சம்பவத்தன்று அதிகாலையில் மகேஷ், வேம்படையார் மகன் நடராஜன், பிரான்சிஸ் மகன் ஆனந்த் ஆகியோர் சேர்ந்து சுடலைகுமாரின் குடிசைக்கு தீ வைத்ததாக கூறப்படுகிறது. இதில் குடிசை எரிந்து சேதமடைந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.32 ஆயிரம் ஆகும். இதுகுறித்த புகாரின்பேரில், களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான மகேஷ் உள்ளிட்ட 3 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.