திருமூர்த்தி அணையில் ஷட்டர்கள் பராமரிப்பு பணிகளை பொதுப்பணித்துறையினர் மும்முரமாக செய்து வருகின்றனர்.
திருமூர்த்தி அணை
உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்தி மற்றும் அமராவதி அணைகள் கட்டப்பட்டு உள்ளது. வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற நீராதாரங்கள் அணைகளுக்கு நீர்வரத்தை அளித்து வருகிறது. அதை அடிப்படையாகக் கொண்டு திருமூர்த்திஅணை மூலமாக கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் பி.ஏ.பி. பாசன திட்டத்தின் கீழ் 3 லட்சத்து 76 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
ஆண்டுக்கு 2 மண்டலங்கள் வீதம் 4 மண்டலங்களுக்கு சுழற்சி முறையில் தண்ணீர் வினியோகம் பெற்று வருகிறது. இதற்கு பி.ஏ.பி. தொகுப்பு அணைகளும் நீர்வரத்தை அளித்து உதவி புரிந்து வருகிறது. அதுமட்டுமின்றி உடுமலை, பூலாங்கிணர், கணக்கம்பாளையம், குடிமங்கலம், மடத்துக்குளம் உள்ளிட்ட கூட்டு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தண்ணீர் நிறுத்தம்
இந்த சூழலில் 3-ம் மண்டல பாசனம் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிறைவு அடைந்தது. மேலும் வெப்பத்தின் தாக்குதல் காரணமாக போதிய மழைப்பொழிவு இல்லாததால் பி.ஏ.பி. திட்ட தொகுப்பு அணைகள் முழுமையான நீர்வரத்தை பெற முடியாமல் தத்தளித்து வருகிறது.
இதன் காரணமாக திருமூர்த்தி அணைக்கு காண்டூர் கால்வாய் மூலம் வந்து கொண்டிருந்த தண்ணீரும் நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் அணையில் உள்ள தண்ணீர் குடிநீர் உபயோகத்திற்கு மட்டும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஷட்டர் பராமரிப்பு பணி
குறைந்த அளவு தண்ணீர் உள்ளதால் அணை மணல் திட்டுக்களுடன் குளம் போல் காட்சி அளித்து வருகிறது. இந்த சூழலில் அணையின் ஷட்டர்களில் வழக்கம்போல் நடைபெறுகின்ற வருடாந்திர பராமரிப்பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பொதுப்பணித்துறையினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
மேலும் கோடை காலத்தை பயன்படுத்தி அணையில் தூர்வாரும் பணி தொடங்கப்படுமா? என்றும் விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
நேற்று காலை நிலவரப்படி 60 அடி உயரம் கொண்ட திருமூர்த்தி அணையில் 27.63அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 42 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.