குடோனில் ரகசிய அறை அமைத்து பதுக்கி வைத்திருந்த 1½ டன் புகையிலை பொருட்கள் பறிமுதல்

கம்பத்தில் குடோனில் ரகசிய அறை அமைத்து பதுக்கி வைத்திருந்த 1½ டன் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது

Update: 2022-06-17 17:15 GMT

கர்நாடக மாநிலம் ஒசூரில் இருந்து கம்பத்திற்கு புகையிலை பொருட்கள் கடத்தப்பட்டு விற்பனை செய்வதாக தென்மண்டல ஐ.ஜி. அஸ்ராகார்க்குக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் தலைமையிலான தனிப்படையினர், உத்தமபாளையம் உதவி போலீஸ் துணை சூப்பிரண்டு ஸரேயா குப்தா, இன்ஸ்பெக்டர் பிச்சைபாண்டியன் ஆகியோர் இணைந்து கம்பம் பகுதியில் தீவிர சோதனை நடத்தினர்.

அப்போது கம்பத்தில், கூடலூர் சாலையில் உள்ள நகராட்சி குப்பை கிடங்கு அருகே தனியாருக்கு சொந்தமான குடோனில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு இருந்த பாதாள ரகசிய அறையை போலீசார் கண்டுபிடித்தனர். பின்னர் அந்த ரகசிய அறையில் இறங்கி பார்த்தபோது புகையிலை பொருட்கள் அடங்கிய மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

அதில் 132 மூட்டைகளில் 1½ டன் புகையிலை பொருட்கள் இருந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கம்பம் பாரதியார் நகரை சேர்ந்த வேலவன் (வயது 39), அவரது சகோதரர் மாரிச்சாமி என்ற சதிஷ் (35) ஆகியோர் கர்நாடக மாநிலத்தில் இருந்து புகையிலை பொருட்களை மொத்தமாக வாங்கி வந்து குடோனில் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. மேலும் போலீசாரின் சோதனையில் இருந்து தப்பிக்க ஊருக்கு ஒதுக்குபுறத்தில் ரகசிய அறை கட்டி குடோன்போல் பயன்படுத்தி வந்ததும் தெரிந்தது. இதையடுத்து போலீசார் வேலவன், மாரிச்சாமி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் மோட்டார்சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்