பருவம் தவறிய மழையால் வளர்ச்சி குன்றிய எள் பயிர்

கொள்ளிடம் பகுதியில் பருவம் தவறி பெய்த மழையால் வளர்ச்சி குன்றிய எள் பயிரை கண்டு விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர்.

Update: 2023-05-26 19:15 GMT

கொள்ளிடம்,;

கொள்ளிடம் பகுதியில் பருவம் தவறி பெய்த மழையால் வளர்ச்சி குன்றிய எள் பயிரை கண்டு விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர்.

எள் சாகுபடி

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு உளுந்து சாகுபடி குறைந்தது. அதற்கு பதிலாக இந்த ஆண்டு விவசாயிகள் பெரும்பாலும் பருத்தி பயிரிட்டு உள்ளனர். ஒருபுறம் பருத்தி சாகுபடி செய்தாலும் மற்றொரு புறத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் எள் சாகுபடி செய்துள்ளனர். எள் பயிர் 60 நாட்களில் பலன் தரக்கூடிய பயிராகும். வறட்சியை தாங்கி வளரக்கூடிய பயிராக எள் பயிர் இருந்து வருகிறது. எள் பயிர் சாகுபடிக்கு அதிக செலவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

பருவம் தவறி பெய்த மழை

வெப்ப காலத்திலும் கோடை உழவு செய்து எள் பயிர் செய்தால் குறுகிய காலத்தில் குறிப்பிட்ட லாபத்தை பெற முடியும். ஒரு ஏக்கருக்கு 3 கிலோ எள் விதைப்பதன் மூலம் 2 மாதங்களில் 6 குவிண்டால் எள் அறுவடை செய்ய முடியும்.அதிகம் செலவு செய்யாமல் கோடை காலத்திலேயே எள் பயிர் அறுவடை செய்யும் போது ஏக்கருக்கு சுமார் ரூ.50 ஆயிரம் வரை லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. குறைந்த செலவில் அதிக லாபம் ஈட்டக்கூடிய இந்த எள் பயிர் தற்போது கொள்ளிடம் பகுதியில் குறைந்த அளவே சாகுபடி செய்திருந்தாலும் கடந்த 20 நாட்களுக்கு முன்பு பருவம் தவறி பெய்த மழையால் எள் பயிர் பாதிக்கப்பட்டு வளர்ச்சி குன்றியுள்ளது.

விவசாயிகள் வேதனை

நன்கு வளர்ச்சி பெற்று வந்த எள் பயிர் கடந்த சில தினங்களாக வளர்ச்சி குறைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர். தற்போது உள்ள சூழ்நிலைபடி ஒரு ஏக்கருக்கு 1 அல்லது 2 குவிண்டால் மட்டுமே எள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. வேளாண் அதிகாரிகளின் ஆலோசனையின் படி உரம் மற்றும் பயிர் நுண்ணூட்டம் தெளித்து எள் பயிரை வளர செய்ய முடியுமா என விவசாயிகள் கேள்வி எழுப்பி உள்ளனர். இதற்கு வேளாண்மை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குறுகிய காலத்துக்குள் எள் பயிரை செழித்து வளர நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்