சேவை இல்லம் நடத்துபவர்கள் பதிவு செய்ய வேண்டும்
மனநலம் பாதித்தவர்கள், மாற்றுத்திறனாளிகளை பராமரிக்கும் சேவை இல்லம் நடத்துபவர்கள் பதிவு செய்ய வேண்டும் என கலெக்டர் அருண் தம்புராஜ் அறிவுறுத்தி உள்ளார்.
மனநலம் பாதித்தவர்கள், மாற்றுத்திறனாளிகளை பராமரிக்கும் சேவை இல்லம் நடத்துபவர்கள் பதிவு செய்ய வேண்டும் என கலெக்டர் அருண் தம்புராஜ் அறிவுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சேவை இல்லங்கள்
நாகை மாவட்டத்தில் ஆதரவற்றோரை பராமரிப்பதற்காகவும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களையும் பராமரிப்பதற்காகவும் தொண்டு நிறுவனங்கள், சேவை இல்லங்களை நடத்தி வரப்படுகிறது.
ஆதரவற்றோருக்கான இல்லங்களில் உடல் ரீதியான பாதிப்பு உள்ள மாற்றுத்திறனாளிகளோ அல்லது மனநலம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளோ பராமரிக்கப்பட்டு வந்தால் அத்தகைய இல்லங்கள் மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டத்தின் கீழ் பதிவு செய்ய வேண்டும்.
பதிவு செய்ய வேண்டும்
இதை போலவே மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு வகையான உதவிகளை செய்து அவர்களுக்கு சேவைபுரிந்துவரும் தொண்டு நிறுவனங்களும் மாற்றுத்திறனாளிகளுக்கான பயிற்சிகளை நடத்திவரும் நிறுவனங்களும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் பதிவு செய்ய வேண்டியது கட்டாயமாகும்.
அவ்வாறு இதுவரை பதிவு செய்யாத தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வரும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை அணுகி அதற்கான விண்ணப்பங்களையும், விவரங்களையும் பெறலாம். மாற்றுத்திறனாளிகள் தொடர்பான சேவைகளை செய்து வரும் பதிவு செய்யப்படாத நிறுவனங்கள் மீது மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம்-2016-ன் படி சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.