ேதாழி புதிதாக வாங்கிய 9 பவுன் நகையை திருடிச் சென்ற ஆசிரியை

திருமங்கலத்தில் ேதாழி புதிதாக வாங்கிய 9 பவுன் நகையை திருடிச் சென்ற ஆசிரியை கைது செய்யப்பட்டார்.

Update: 2022-06-28 19:56 GMT

திருமங்கலம், 

மதுரை திருமங்கலம் சங்கர்நகர் 5-வது தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவருடைய மனைவி செந்தில் நாயகி. இவரும் மதுரை தலைவிரித்தான் சந்து பகுதியைச் சேர்ந்த அகமத் ராஜாவின் மனைவி உமா மகேசுவரி என்ற ரெய்னாபேகமும் (வயது 32) ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தனர்.

கடந்த 8 ஆண்டுகளாக இருவரும் தோழியாக இருந்து வந்தனர். சம்பவத்தன்று ரெய்னா பேகம் தான் வாங்கிய இரவல் மடிக்கணினியை கொடுப்பதற்காக திருமங்கலத்தில் உள்ள தோழி செந்தில் நாயகி வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது செந்தில்நாயகி தான் புதிதாக வாங்கிய 9½ பவுன் நகையை ரெய்னாபேகத்திடம் காண்பித்துள்ளார். பின்னர் நகையை படுக்கையறையில் வைத்துள்ளார். இதனைத்தொடர்ந்து ரெய்னாபேகம் மடிக்கணினியை கொடுத்துவிட்டு மதியம் வீட்டிற்கு கிளம்புவதாக கூறியுள்ளார். வீட்டிற்கு கிளம்பும் முன் படுக்கையறைக்குச் சென்று தன்னுடைய துணியை மாற்றி விட்டு அங்கிருந்து வீட்டுக்குச் சென்றுவிட்டார்.

மறுநாள் காலையில் படுக்கை அறையில் வைத்து இருந்த நகை பெட்டியை செந்தில்நாயகி திறந்து பார்த்தபோது அதில் இருந்த 9½ பவுன் நகை மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ரெய்னா பேகத்திடம், அவர் கேட்டு உள்ளார். அதற்கு நகை காணாமல் போனது பற்றி தனக்கு தெரியாது என அவர் பதில் கூறியுள்ளார். இதையடுத்து செந்தில்நாயகி வீட்டில் பல்வேறு இடங்களில் தேடி உள்ளார். நகை கிடைக்காததால் இது குறித்து திருமங்கலம் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சந்தேகத்தின் பேரில் ரெய்னாபேகத்தை வரவைத்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் தோழி வீட்டில் 9½ பவுன் நகையை திருடியதை ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து ரெய்னா பேகத்தை திருமங்கலம் நகர் போலீசார் கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்