யானை தாக்கி விவசாயி படுகாயம்
பென்னாகரம் அருகே யானை தாக்கி விவசாயி படுகாயம் அடைந்தார்.
பென்னாகரம்
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள கூத்தப்பாடி பகுதியை சேர்ந்தவர் பெரியண்ணன் (வயது 72). விவசாயி. இவர் தனது விவசாய நிலத்தில் உள்ள குடிசையில் இரவில் தங்குவது வழக்கம். அந்த வகையில் நேற்று முன்தினம் தனது குடிசையில் படுத்து தூங்கினார். நேற்று அதிகாலை அவருடைய விளைநிலத்தில் ஒற்றை காட்டு யானை நுழைந்தது. அதனை கண்டு பதறி ஓடிய பெரியண்ணனை விரட்டி சென்ற யானை அவரை இடித்து தள்ளிவிட்டு சென்றது. இதில் அவர் 7 அடி பள்ளத்தில் தவறி விழுந்து உயிர் தப்பினார். மேலும் தோல்பட்டை, கால் உள்ளிட்ட பகுதிகளில் படுகாயம் அடைந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வந்து முதியவரை மீட்டு பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.