தொடர் லாக் அப் மரணங்கள்: ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் விசாரணை வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
திமுக ஆட்சியில் லாக் அப் மரணங்கள் தொடர் கதையாகி வருவதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சென்னை,
திமுக ஆட்சியில் லாக் அப் மரணங்கள் தொடர் கதையாகி வருவதாக குற்றஞ்சாட்டியுள்ள சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, இவை குறித்து ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,
"மீண்டும் ஒரு லாக்-அப் மரணம், சென்னை கொடுங்கையூரில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட ராஜசேகர் என்பவர் காவல்நிலையத்தில் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை தருகிறது. இந்த ஆட்சியில் லாக்-அப் மரணங்கள் தொடர்கதையாகி வருவதை நாங்கள் பலமுறை சுட்டிக்காட்டியும் எந்த நடவடிக்கையும் இல்லை.
இவ்வாட்சியில் லாக்-அப் மரணங்களை தடுக்கவோ, காவல்துறையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கவோ முடியாது என்பதை இச்சம்பவங்கள் நிரூபித்துவிட்ட நிலையில், உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விடியா அரசில் நடந்த லாக்கப் மரணங்கள் குறித்து சட்டப்படி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.