தொடர் வெடிவிபத்து: தீபாவளி முடியும்வரை பட்டாசு ஆலைகளில் ஆய்வு
விதிமீறல்களில் ஈடுபடும் பட்டாசு ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழிலக பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.;
சென்னை,
தீபாவளி முடியும் வரை பட்டாசு ஆலைகளில் சிறப்பு ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை தெரிவித்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு சிவகாசி பட்டாசு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டு 10 தொழிலாளர்கள் பலியாகினர். இதனை தொடர்ந்து கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளதால் பல்வேறு தொழிற்சாலைகள் மற்றும் பட்டாசு ஆலைகளில் தீ விபத்து ஏற்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து பட்டாசு தொழிற்சாலைகளில் அடிக்கடி வெடிவிபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ்வதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், விருதுநகரில் 1000க்கும் மேற்பட்ட பட்டாசு தொழிற்சாலையானது செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு தொழிற்சாலையை ஆய்வு செய்வதற்கு 4 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. வருவாய், தீயணைப்புத்துறை, தொழிலக பாதுகாப்பு உள்ளிட்ட பலதுறை அதிகாரிகள் கொண்ட குழு பட்டாசு ஆலைகளில் தினசரி அடிப்படையில் ஆய்வு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர் ஆய்வு மேற்கொண்டு விதிமீறல்களில் ஈடுபடும் பட்டாசு ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், தீபாவளி முடியும் வரை பட்டாசு ஆலைகளில் சிறப்பு ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று தொழிலக பாதுகாப்புத்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.