செப்பறை அழகிய கூத்தர் கோவில் தேரோட்டம்
நெல்லை அருகே ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
நெல்லை அருகே ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
செப்பறை அழகிய கூத்தர் கோவில்
நெல்லை அருகே உள்ள ராஜவல்லிபுரத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில் பழமை வாய்ந்த செப்பறை அழகிய கூத்தர் கோவில் அமைந்து உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் திருவாதிரை திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும்.
இந்த ஆண்டு திருவாதிரை திருவிழா கடந்த மாதம் 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடக்கும் இந்த விழாவில் தினமும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
தேரோட்டம்
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலையில் நடந்தது. இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி, அம்பாளுடன் எழுந்தளுளினார். காலை 11.30 மணிக்கு தேரை வடம் பிடித்து பக்தர்கள் இழுத்தனர்.
இயற்கை எழில் சூழ்ந்த ரத வீதிகளில், மக்கள் வெள்ளத்தில் தேர் அசைந்தாடியபடி வந்தது கண்கொள்ளா காட்சியாக இருந்தது. இதில் நெல்லை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நெல்லையப்பர் கோவில்
இதேபோல் நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவிலில் திருவாதிரை திருவிழா 9-ம் நாளான நேற்று சந்திரசேகர், பவானி அம்பாள் செப்பு தேரில் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடந்தது. இரவு நடராஜ பெருமாளுக்கு வரலாற்று புகழ்பெற்ற தாமிரசபையில் திருநீராட்டு மற்றும் சிறப்பு தீபாராதனை நடந்தது.