மக்களை பிரித்து ஆளுவது தான் பா.ஜனதாவின் கொள்கை - கே.எஸ்.அழகிரி
மக்களை பிரித்து ஆளுவது தான் பா.ஜனதாவின் கொள்கை என காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டி உள்ளார்.
மக்களை பிரித்து ஆளுவது தான் பா.ஜனதாவின் கொள்கை என காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டி உள்ளார்.
அழகிரி பேட்டி
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று கும்பகோணம் வந்தார். கும்பகோணம் ரெயில் நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
இந்தியாவில் பொது சிவில் சட்டம் கொண்டு வந்தால் பிரச்சினைகள் ஏற்படும். இந்த சட்டம் ஒரே மதம், இனம், மொழி உள்ள நாட்டுக்குத் தான் பொருந்தும். இந்தியாவில் பல்வேறு மதங்கள் உள்ளன. இதே போல் இந்து மதம் ஒரே நாகரீகம், கலாசாரம் கொண்ட மதம் அல்ல.
இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவதாகப் பிரதமர் மோடி அறிவித்து, தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளார். அந்தச் சட்டத்தைக் கொண்டு வருவதின் மூலம் வெற்றி பெற்று விடலாம் என பா.ஜனதா கட்சியினர் நினைக்கிறார்கள்.
பிரித்து ஆளுவது...
மக்களை மதரீதியாக பிரித்தால் தான் தேர்தலில் வெற்றி கிடைக்கும் என பா.ஜனதா கருதுகிறது. அவர்களின் கொள்கையே மக்களை பிரித்து ஆளுவது தான். இது மிகவும் ஆபத்தானதாகும். இந்திய ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ள அனைவரும் இதை எதிர்க்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது காங்கிரஸ் மாவட்ட தலைவர் லோகநாதன், கும்பகோணம் மாநகராட்சி மேயர் சரவணன், மாநகர காங்கிரஸ் தலைவர் மிர்சா, மாநில பொதுக்குழு உறுப்பினர் தியாகராஜன் மற்றும் நிர்வாகிகள் பாலதண்டாயுதம், மணிசங்கர் மணிராஜ், சிவக்குமார், நெல்சன், விஜயகுமார் மற்றும் பலர் உடன் இருந்தனர்.