30 படுக்கைகளுடன் கொரோனா தனி வார்டு

தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் 30 படுக்கைகளுடன் கொரோனா தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இதில் வெண்டிலேட்டர் வசதி, மருந்து மாத்திரைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

Update: 2022-06-30 18:12 GMT

கொரோனா

இந்தியாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிரடியாக உயர்ந்து வருகிறது. தமிழகத்திலும் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு குறைந்து இருந்த நிலையில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதன் காரணமாக பொதுமக்கள் அனைவரும் பொது இடங்களுக்கு வரும்போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். தனிமனித இடைவெளியை முறையாக கடைப்பிடிக்க வேண்டும். பூஸ்டர் தடுப்பூசி செலுத்தாதவர்கள் உடனடியாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த மாவட்டம் நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

மாவட்டத்திலுள்ள அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், பஸ் நிலையங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு ஆஸ்பத்திரிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் கொரோனா சிகிச்சைக்காக தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக சிறப்பு டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தயார் நிலையில் தனிவார்டு

இதனிடையே தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் 30 படுக்கைகளுடன் கொரோனா தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இங்கே வெண்டிலேட்டர், ஆக்சிஜன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேவையான மருந்து மாத்திரைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இந்த தனி வார்டுக்கு டாக்டர்கள், நர்சுகள் தயார் நிலையில் உள்ளனர்.

இந்த வார்டை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி முதல்வர் அமுதவல்லி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் கூறும் போது,'தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். வைரஸ் பாதிப்பு உள்ள நோயாளிகள் முறையான பரிசோதனைக்கு பின் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் உள்ள தனி வார்டில் அனுமதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு தேவையான அனைத்து மருத்துவ வசதிகளும் செய்து கொடுக்கப்படும்' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்