காட்டுயானை-மனித மோதலை தடுக்க மாவட்ட அளவில் தனி குழு

காட்டுயானை-மனித மோதலை தடுக்க மாவட்ட அளவில் தனி குழு அமைக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் அம்ரித் கூறினார்.

Update: 2023-01-30 18:45 GMT

ஊட்டி

காட்டுயானை-மனித மோதலை தடுக்க மாவட்ட அளவில் தனி குழு அமைக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் அம்ரித் கூறினார்.

காட்டுயானை-மனித மோதல்

நீலகிரி மாவட்டத்தில் காட்டுயானை-மனித மோதல் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பாக ஊட்டியில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில், நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

காட்டுயானை-மனித மோதலை தடுக்க மாவட்ட நிர்வாகம், வனத்துறை, காவல்துறை இணைந்து தனி குழு அமைக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக கேரளாவில் இருந்து ஓவேலிக்கு வரும் காட்டுயானைகளை கண்காணிக்க பார்வுட், சூண்டி, நாயக்கன் பாறை, வட்டப்பாறை, எல்லமலை பகுதிகளில் கோபுரங்கள் அமைக்கப்பட உள்ளது. மேலும் 40 வேட்டை தடுப்பு காவலர்கள், யானை விரட்டும் குழுவினர் பணியமர்த்தப்பட்டு, கும்கி யானைகள் உதவியுடன் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட இருக்கிறது.

புதிய மின்வேலிகள்

முதற்கட்டமாக தனியார் தேயிலை தோட்டங்களில் காட்டுயானைகள் முகாமிட்டு இருந்தால், தொழிலாளர்களை பணிக்க அனுப்பக்கூடாது என்று அந்தந்த நிர்வாகத்துக்கு, கூட்டம் நடத்தி அறிக்கை அனுப்பி வைக்கப்படும். அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் வேலைக்கு அனுப்புவதை தவிர்த்து காலை 8.30 மணிக்கு மேல் மதியம் 2.30 மணிக்குள் வேலை வழங்க அறிவுறுத்தப்பட உள்ளது.

ஓவேலி பகுதியில் வெளிநாட்டு வனவிலங்கு ஆராய்ச்சியாளர்களை கொண்டு காட்டுயானைகள் ஊருக்குள் வருவதை தடுப்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

சட்டப்பிரிவு-17 வகை நிலங்களில் வளர்ச்சி பணிகளை தடையின்றி மேற்கொண்டு, அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஓவேலி, கூடலூர், நாடுகாணி ஆகிய பகுதிகளில் வன எல்லையில் புதிதாக மின்வேலிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பிரச்சினைக்கு தீர்வு

முதுமலை கள இயக்குனர் வெங்கடேஷ் கூறும்போது, கன்னியாகுமரி முதல் நீலகிரி வரை யானை வழித்தடங்கள் குறித்து ஆய்வு நடத்தப்படுகிறது. இந்த பணி முடிந்த பிறகு யானை வழித்தட பிரச்சினைக்கு தீர்வு காணப்படும். ஓவேலி பகுதியில் காட்டுயானைகள் நுழைவதை அறிய 2 அதிநவீன டிரோன்கள்(ஆளில்லா குட்டி விமானம்) மூலம் கண்காணிப்பு பணி நடைபெறும். கும்கி யானைகளை ஒரே இடத்தில் அதிக நாட்கள் நிற்க வைக்க முடியாது என்பதால், வேறு கும்கி யானைகள் மாற்றப்படும் என்றார்.

நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் கூறுகையில், தமிழக அரசுக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவிடுவோர் மீது வழக்குப்பதிவு செய்ய சைபர் கிரைம் போலீசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்