உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தில் 10 திட்டங்களை சேர்க்க செந்தில்குமார் எம்.எல்.ஏ. கலெக்டரிடம் கோரிக்கை
உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தில் 10 திட்டங்களை சேர்க்க செந்தில்குமார் எம்.எல்.ஏ. கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.
வாணியம்பாடி சட்டமன்ற தொகுதியில் நீண்ட நாட்களாக கிடப்பில் உள்ள கோரிக்கை மற்றும் திட்டப்பணிகளில் 10 முக்கிய திட்டங்களை உங்கள் தொகுதி முதல்-அமைச்சர் திட்டத்தில் சேர்த்து செயல்படுத்த வேண்டுமென கோ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. கலெக்டர் அமர்குஷ்வாஹாவிடம் கோரிக்கை மனுவை அளித்தார்.
அதில், வாணியம்பாடி-நியூடவுன் ெரயில்வேகேட் அடிக்கடி மூடப்படுவதால் தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். அந்த இடத்தில் பாலம் அமைக்க வேண்டும். வாணியம்பாடி அரசு மருத்துவமனையை மேம்படுத்தி எம்.ஆர்..ஐ.. ஸ்கேன் உள்ளிட்ட வசதிகளுடன் கூடுதல் கட்டிடங்கள் கட்ட வேண்டும். மல்லகுண்டாவில் தொழிற்பூங்கா அமைக்க வேண்டும்.வாணியம்பாடியில் அரசு மருத்துவ கல்லூரி, அரசு தொழில்நுட்ப கல்லூரி, அரசு இருபாலர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும். வாணியம்பாடி நகர மையப்பகுதியில் செல்லும் பெரியபேட்டை ஆறு, சின்னாறு கால்வாய்களை தூர்வாரி சீரமைத்து சின்னாற்றில் 5 இடங்களில் மேம்பாலம் மற்றும் பெரியபேட்டை ஆற்றில் 3 மேம்பாலங்கள் அமைத்து இருபுறங்களில் தார்சாலை அமைக்க வேண்டும் உள்ளிட்ட 10 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார்.
அப்போது நாட்டறம்பள்ளி ஒன்றிய செயலாளர் சாம்ராஜ், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பாரதிதாசன், கோவிந்தசாமி, குமார், வாணியம்பாடி நகரமன்ற உறுப்பினர் ஹாஜியார் ஜஹீர்அகமது ஆகியோர் உடன் இருந்தனர்.