வாட்ஸ் அப் குழுவில் தகவல் அனுப்பி கிரிப்டோ கரன்சி முதலீடு செய்வதாக ரூ.30 ஆயிரம் மோசடி ஈரோடு சைபர் கிரைம் போலீசார் மீட்டனர்

கிரிப்டோ கரன்சி முதலீடு செய்வதாக ரூ.30 ஆயிரம் மோசடி

Update: 2022-06-29 17:49 GMT

வாட்ஸ் அப் குழுவில் தகவல் அனுப்பி கிரிப்டோ கரன்சி முதலீடு செய்வதாக ரூ.30 ஆயிரம் மோசடி செய்யப்பட்டது. இந்த பணத்தை ஈரோடு சைபர் கிரைம் போலீசார் மீட்டனர்.

கிரிப்டோ கரன்சி மோசடி

புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த செல்லதுரை என்பவர் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகனிடம் புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறிஇருந்ததாவது:-

எனது செல்போனில் வாட்ஸ் அப் குழுவின் மூலமாக கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் என்ற தகவல் வந்தது. அந்த தகவலை நம்பி அருண் என்பவரின் வங்கி கணக்கிற்கு ரூ.30 ஆயிரம் ஆன்லைன் மூலமாக அனுப்பினேன். ஆனால் என்னிடம் கூறியதை போல எந்தவொரு தொகையும் திருப்பி கொடுக்கப்படவில்லை. எனவே கிப்டோ கரன்சியில் முதலீடு செய்வதாக மோசடி செய்த எனது பணத்தை திரும்ப பெற்று தர வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறிஇருந்தார். மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் சைபர் கிரைம் பிரிவு போலீசாரிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

வங்கி கணக்கு முடக்கம்

இந்த புகாரின்பேரில் சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். தொடர்ந்து பணம் செலுத்தப்பட்ட வங்கி கணக்கை முடக்கி ரூ.30 ஆயிரத்தை திரும்ப பெற்று செல்லதுரையிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், "செல்லதுரை கடந்த 27-ந் தேதி பணத்தை இழந்ததும் புகார் கொடுத்தார். இதனால் உடனடியாக பணத்தை மீட்க முடிந்தது. எனவே ஆன்லைன் மோசடி மூலமாக பணத்தை இழந்த 24 மணி நேரத்துக்குள் 1930 என்ற சைபர் கிரைம் உதவி எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால் இழந்த பணம் மீட்டு தரப்படும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் இருந்து வரும் குறுந்தகவலை நம்பி விவரங்களை தெரிவிக்க வேண்டாம். குறிப்பாக எந்தவொரு வங்கிகளில் இருந்தும் இதுபோன்ற விவரங்களை தொலைபேசி மூலமாக கேட்கமாட்டார்கள்.", என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்