சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு; டாக்டரை கத்தரிகோலால் குத்திய நோயாளி

சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டரை கத்தரிகோலால் நோயாளி குத்திய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இதை கண்டித்து டாக்டர்கள் போராட்டம் நடத்தியதால் சிகிச்சை கிடைக்காமல் நோயாளிகள் அவதிப்பட்டனர்.

Update: 2023-05-31 00:24 GMT

சென்னை,

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்துக்கு உட்பட்ட கொட்டாரக்கரை அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றி வந்த டாக்டர் வந்தனா தாஸ், சிகிச்சைக்கு வந்த சந்தீப் என்ற நோயாளியால் கத்தரிக்கோலால் கொடூரமாக குத்தி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதையடுத்து டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், கேரள அரசு, டாக்டர்களை பாதுகாப்பதற்கு தனி சட்டத்தை இயற்றியது.

இந்த சம்பவம் அரங்கேறிய சுவடுகள் மக்களின் மனதில் இருந்து நீங்குவதற்குள், சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் இதேபோன்ற ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.

சென்னை ஆஸ்பத்திரி

சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் பயிற்சி டாக்டராக இருப்பவர் சூர்யா.

இவர் நேற்று முன்தினம் இரவு கல்லீரல் பிரச்சினை காரணமாக உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டிருந்த பாலாஜி என்ற நோயாளிக்கு மருத்துவ பரிசோதனை செய்துகொண்டிருந்தார்.

கத்தரிக்கோலால் கழுத்தில் குத்தினார்

பாலாஜிக்கு குளுக்கோஸ் ஏற்றுவதற்காக அவரது கையில் ஊசி வைக்கப்பட்டு இருந்தது. இந்த ஊசியை அகற்ற வேண்டும் என்று டாக்டர் சூர்யாவிடம் பாலாஜி கூறியுள்ளார்.

ஆனால் தொடர்ந்து சிகிச்சை அளிக்க இருப்பதால் அதனை அகற்ற கூடாது என்று டாக்டர் அறிவுறுத்தியதாக தெரிகிறது. ஆனால் இதனை ஏற்க மறுத்த பாலாஜி, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில், அங்கு இருந்த கத்தரிக்கோலை எடுத்து சூர்யாவின் கழுத்தில், பாலாஜி சரமாரியாக குத்தினார். இதில் நிலை குலைந்த சூர்யாவுக்கு காயம் ஏற்பட்டது. உடனே அவரை மீட்டு சக டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.

டாக்டர்கள் போராட்டம்

நோயாளி ஒருவரால் டாக்டர் தாக்கப்பட்டது தொடர்பான தகவல் ஆஸ்பத்திரி முழுவதும் பரவியது. சக டாக்டர் ஒருவர் நோயாளியால் தாக்கப்பட்டதை கண்டித்து பயிற்சி டாக்டர்கள் நள்ளிரவில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து ஆஸ்பத்திரி டீன் டாக்டர் தேரணி ராஜன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். அவர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட பயிற்சி டாக்டர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பயிற்சி டாக்டர்களின் பாதுகாப்புக்கு கூடுதல் பாதுகாவலர்கள் அமர்த்தப்படுவதாகவும், இனி வரும் காலங்களில் டாக்டர்களின் பணி பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றும் தேரணி ராஜன் அவர்களிடம் கூறினார்.

மேலும் பாலாஜியை போலீசார் கைது செய்த விவரத்தையும் கூறினார்.

போராட்டம் வாபஸ்

பயிற்சி டாக்டர்களின் கோரிக்கை தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் தெரிவித்து இருப்பதாகவும் அவர் எடுத்து கூறினார்.

இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு மற்றும் சமரசம் ஏற்பட்டதையடுத்து பயிற்சி டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை கைவிட்டு தங்களது பணியை தொடர்ந்தனர்.

நோயாளிகள் அவதி

பயிற்சி டாக்டர்களின் போராட்டம் நள்ளிரவு 1 மணி முதல் அதிகாலை 4 மணி வரையிலும் என 3 மணி நேரம் நடைபெற்றது.

போராட்டம் நடைபெற்ற சமயத்தில் நோயாளிகளுக்கு சரிவர சிகிச்சை கிடைக்கவில்லை. இதனால் நோயாளிகள் அவதி அடைந்தனர். இந்த போராட்டத்தால் ஆஸ்பத்திரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்