தேவூர் பகுதியில்பூத்து குலுங்கும் செண்டு மல்லிவிலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை

Update: 2023-06-16 20:34 GMT

தேவூர் 

தேவூர் பகுதியில் பூத்து குலுங்கும் செண்டு மல்லி பூக்கள் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

செண்டுமல்லி பூக்கள்

தேவூர் அருகே ஒடசக்கரை, தண்ணிதாசனூர், மேட்டுப்பாளையம், பூமணியூர், உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் செண்டுமல்லி பூ சாகுபடி செய்துள்ளனர்.

அவ்வாறு சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் தற்போது பூக்கள் பூத்துக் குலுங்கி வருவதால் விவசாயிகள் அறுவடை செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்,

2 ரூபாய்க்கு ஒரு செடி

இதுகுறித்து தேவூர் பகுதியில் செண்டுமல்லி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கூறியதாவது:-

தேவூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக விவசாயிகள் சாமந்தி, செண்டுமல்லி பூ சாகுபடி செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த ஆண்டு விவசாயிகள் செண்டுமல்லி பூ நாற்று செடிகளை கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதியில் நாற்று 1 செடி ரூ.2 வீதம் வாங்கி ஒரு ஏக்கருக்கு 10 ஆயிரம் நாற்று செடிகளை நடவு செய்து விவசாயம் செய்து வந்தனர்.

தற்போது வயல்களில் பூத்து குலுங்கும் செண்டு மல்லி செடிகளை கூலி தொழிலாளர்களை பயன்படுத்தி விசவாயிகள் அறுவடை செய்து வருகின்றனர். அவ்வாறு அறுவடை செய்யப்பட்ட பூக்கள் சேலம், ஈரோடு, பவானி பகுதிகளுக்கு கொண்டு சென்று ஒரு கிலோ ரூ.15 முதல் ரூ.30 வீதம் விற்பனை செய்து வருகிறோம் என்றனர். தேவூர் பகுதியில் செண்டுமல்லி பூ நல்ல மகசூல் கொடுத்தாலும் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்