பள்ளிகளுக்கு பாடப்புத்தகம் அனுப்பும் பணி

தர்மபுரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் அனுப்பும் பணியை பாடநூல் கழக இயக்குனர் கண்ணப்பன் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2022-06-10 20:33 GMT

பென்னாகரம்:

பாடப்புத்தகங்கள்

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே பி.அக்ரஹாரம் அரசு மேல்நிலை பள்ளியில் நடப்பு ஆண்டில் மாணவர்களுக்கு வழங்கப்படும் பாடப்புத்தகங்கள் பள்ளிக்கு வழங்கும் பணியினை தமிழ்நாடு பாடநூல் கழக இயக்குனரும், கல்வியியல் பணிகள் கழக உறுப்பினர் செயலாளருமான ச.கண்ணப்பன் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் பென்னாகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த எண்ணும் எழுத்தும் பயிற்சியினை ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அடிப்படை வசதிகள்

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக தொடக்கப்பள்ளி மாணவர்கள் கல்வியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை சரிசெய்து, கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் எண்ணும் எழுத்தும் பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மாவட்டத்தில் தர்மபுரி, பாலக்கோடு, காரிமங்கலம், மொரப்பூர், நல்லம்பள்ளி, பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, பென்னாகரம் உள்ளிட்ட வட்டாரங்களில் நடந்து வருகிறது. மாவட்டம் முழுவதிலும் இருந்து 1,438 தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர்.

பள்ளிகள் விரைவில் திறக்கப்பட இருப்பதால், பாலக்கோடு, காரிமங்கலம், பி.அக்ரஹாரம், பென்னாகரம் பகுதிகளில் உள்ள மேல்நிலை பள்ளிகளை ஆய்வு செய்தேன். பள்ளி வளாகம், வகுப்பறை, கரும்பலகை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவாக உள்ளது. தொடக்கப்பள்ளி, நடுநிலை பள்ளிகளில் ஏதேனும் சிறு குறைப்பாடுகள் இருப்பின், அவற்றினை மாவட்ட கல்வி அலுவலர், முதன்மை கல்வி அலுவலர் சரி செய்ய அறிவுறுத்தி உள்ளேன்.

ரூ.100 கோடி

மாவட்டத்தில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை 1 லட்சத்து 87 ஆயிரத்து 115 மாணவர்கள் படித்து வருகின்றனர். நடப்பு ஆண்டு பாடப்புத்தகங்கள் பாடநூல் கழகத்தில் இருந்து பெறப்பட்டு கல்வி மாவட்ட அளவில் உள்ள வினியோக மையங்களுக்கு அனுப்பி வைத்துள்ளோம். இன்னும் ஓரிரு நாட்களில் அந்தந்த பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் அனுப்பி வைக்கப்படும்.

தர்மபுரி மாவட்டம் கல்வியில் முன்னோடி மாவட்டமாக திகழும். முதுகலை ஆசிரியர்களுக்கான தேர்வு நடைபெற்று முடிவுகள் வெளியான பிறகு காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் நிரப்புவதற்கான வாய்ப்பு உள்ளது. கடந்த ஆண்டு பள்ளிகளின் சீரமைப்புக்காக சுமார் ரூ.38 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போதைய தமிழக அரசு அதனை ரூ.100 கோடியாக உயர்த்தி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன், மாவட்ட கல்வி அலுவலர் ராஜகோபால், கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன், பள்ளி ஆய்வாளர் இளமுருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்