பொங்கல் பரிசு தொகுப்பு ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. பொதுமக்களுக்கு நாளை (திங்கட்கிழமை) முதல் வினியோகிக்கப்படுகிறது.;

Update: 2023-01-07 19:06 GMT

பொங்கல் பரிசு தொகுப்பு

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வருகிற 15-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழக அரசின் சார்பில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் ரூ.1,000 ஆகியவை பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கப்படுகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 671 முழு நேர ரேஷன் கடைகள், 368 பகுதிநேர ரேஷன் கடைகளில் உள்ள ரேஷன் கார்டுதாரர்கள், இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு மையத்தில் உள்ளவர்கள் என மொத்தம் 4 லட்சத்து 90 ஆயிரத்து 182 பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பிற்கான டோக்கன் வினியோகிக்கப்படுவதாக மாவட்ட வழங்கல் துறையினர் தெரிவித்தனர். பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்காக டோக்கன் வழங்கும் பணி கடந்த 3-ந் தேதி முதல் நடைபெற்றது. இதில் வீடு, வீடாக டோக்கன் வினியோகிக்கப்பட்டன.

ரேஷன் கடைகளுக்கு...

இந்த நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பில் இடம்பெற்றுள்ள பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு ஆகியவை அந்தந்த ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் பெரும்பாலான கடைகளுக்கு பச்சரிசி, சர்க்கரை மூட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டன. கரும்பு மட்டும் ஆங்காங்கே விவசாயிகளிடம் கொள்முதல் செய்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படுகிறது.

விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் கரும்பிற்கான விலையை அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இடைத்தரகர்கள் இல்லாமல் அதிகாரிகள் குழுவினர் நேரடியாக கள ஆய்வு செய்து கரும்பினை கொள்முதல் செய்வதாக கூறினர்.

நாளை முதல் வினியோகம்

இதேபோல் பொங்கல் பரிசு தொகுப்பு, ரூ.1,000 ஆகியவை அந்தந்த ரேஷன் கடைகளுக்கு ரேஷன்கார்டுதாரர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப வழங்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு நாளை (திங்கட்கிழமை) ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்பட உள்ளது.

சென்னையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இத்திட்டத்தை தொடங்கி வைக்கிறார். அதன்பின் அந்தந்த மாவட்டங்களில் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. நாளை காலை 9 மணி முதல் பொருட்கள் வினியோகிக்கப்பட உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்