கேரளாவுக்கு 15 டன் பூக்கள் அனுப்பி வைப்பு

சித்திரை விஷூ கொண்டாட்டத்தையொட்டி, திண்டுக்கல்லில் இருந்து கேரளாவுக்கு 15 டன் பூக்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

Update: 2023-04-13 14:30 GMT

தமிழ் புத்தாண்டு

தமிழ் புத்தாண்டு இன்று (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோவில்கள் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். இதேபோல் வீடுகளில் மக்கள் பூஜை செய்வது வழக்கம். இதற்காக பூக்களை வாங்குவதற்கு திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் உள்ளூர், வெளியூர் வியாபாரிகள் நேற்று குவிந்தனர்.

இதற்கு ஏற்ப திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதிகளான சின்னாளப்பட்டி, செம்பட்டி, கன்னிவாடி, தாடிக்கொம்பு, ஏ.வெள்ளோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்காக மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்டன. திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் வழக்கமாக 10 டன் அளவுக்கே பூக்கள் விற்பனைக்கு வரும்.

ஆனால் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நேற்றைய தினம் 25 டன் பூக்களை விவசாயிகள் கொண்டு வந்து குவித்தனர். மல்லிகை, கோழிக்கொண்டை, முல்லை, சம்பங்கி, அரளி, ராஜா, சாதிப்பூ என அனைத்து வகையான பூக்களும் கொண்டு வரப்பட்டு இருந்தன. இந்த பூக்களை வியாபாரிகள், பொதுமக்கள் போட்டி போட்டு வாங்கி சென்றனர்.

கேரளாவுக்கு 15 டன் பூக்கள்

இதற்கிடையே கேரளாவில் நாளை (சனிக்கிழமை) சித்திரை விஷூ பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கேரள வியாபாரிகள் பூக்களை வாங்க, திண்டுக்கல் பூ மார்க்கெட்டுக்கு படையெடுத்தனர். கேரள வியாபாரிகள் அனைத்து வகையான பூக்களையும் வாங்கினர்.

அதிலும் சம்பங்கி, மல்லிகை, ரோஜா, செண்டுமல்லி, அரளி உள்ளிட்ட பூக்கள் அதிகளவு வாங்கி சென்றனர். இதன்மூலம் நேற்று ஒரே நாளில் மட்டும் 15 டன் பூக்கள் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. கேரள வியாபாரிகளும், உள்ளூர் வியாபாரிகளும் பூக்களை வாங்க போட்டியிட்டதால் பூக்களின் விலை உயர்ந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

விலை உயர்வு

அதன்படி திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் நேற்றைய தினம் மல்லிகைப்பூ கிலோ ரூ.900-க்கும், சாதிப்பூ ரூ.700-க்கும், முல்லைப்பூ ரூ.900-க்கும், கனகாம்பரம் ரூ.600-க்கும், காக்கரட்டான் ரூ.700-க்கும், செவ்வந்தி ரூ.250-க்கும், அரளிப்பூ ரூ.500-க்கும், சம்பங்கி ரூ.150-க்கும், ரோஜா ரூ.100-க்கும், கோழிக்கொண்டை மற்றும் செண்டுமல்லி தலா ரூ.50-க்கும், மரக்கொழுந்து ரூ.60-க்கும், தாமரைப்பூ ஒன்று ரூ.10-க்கும் விற்பனை ஆனது.

Tags:    

மேலும் செய்திகள்