செண்பகவல்லி அம்மன் கோவில் வருசாபிஷேக விழா

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் வருசாபிஷேக விழா நடைபெற்றது.

Update: 2023-01-27 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாதசுவாமி கோவில் 71-ம் ஆண்டு வருசாபிஷேக விழா நேற்று நடந்தது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. திருப்பள்ளி எழுச்சி, திருவனந்தல் மற்றும் விளா பூஜை நடந்தது.

காலை 7 மணிக்கு மகா கணபதி ஹோமம், யாகசாலை பூஜை, திரவியஹூதி, பூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தது. காலை 9.20 மணிக்கு யாக சாலையில் இருந்து கடம் புறப்பாடு நடந்தது. தொடர்ந்து சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களின் கோபுர விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி அபிஷேகம், தீபாராதனை, வருசாபிஷேக விழா நடந்தது.

இதனைத் தொடர்ந்து மூலஸ்தான அம்பாள் மற்றும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடந்தது. விழாவில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ., கோவில் செயல் அலுவலர் வெள்ளைச்சாமி, ஆய்வாளர் சிவகலை பிரியா, அறங்காவலர் குழு முன்னாள் தலைவர் ராஜகுரு, அறங்காவலர் குழு முன்னாள் உறுப்பினர் திருப்பதி ராஜா, நகர அ.தி.மு.க. செயலாளர் விஜய பாண்டியன், மாவட்ட பஞ்சாயத்து முன்னாள் தலைவர் சத்யா, நகரசபை கவுன்சிலர் விஜயகுமார் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இரவு 7 மணிக்கு சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்