செம்புலிங்க அய்யனார் கோவில் தைப்பூச தீர்த்தவாரி

முதனை செம்புலிங்க அய்யனார் கோவிலில் தைப்பூச தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2023-02-04 18:45 GMT

விருத்தாசலம், 

விருத்தாசலம் அடுத்த முதனை கிராமத்தில் பெரியநாயகி உடனுறை முதுகுன்றீஸ்வரர் மற்றும் செம்புலிங்க அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தை முன்னிட்டு தைப்பூச தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான தீர்த்தவாரி கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினந்தோறும் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் சாமி வீதிஉலா நடைபெற்று வந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று தைப்பூச தீர்த்தவாரி நடைபெற்றது. முன்னதாக பக்தர்கள் விருத்தாசலம் மணிமுக்தாற்றில் இருந்து சக்தி கரகம், பால்குடம், காவடி ஆகியவற்றை ஊர்வலமாக எடுத்துக்கொண்டு முதனை செம்புலிங்க அய்யனார் கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

வேல்மூழ்குதல்

தொடர்ந்து கோவிலை வலம் வந்து சித்தர் ஏரியில் வேல் மூழ்குதல் நிகழ்ச்சி நடந்தது. அப்போது திரளான பக்தர்கள் சித்தர் ஏரியில் இருந்த தண்ணீரை தெளித்து அரோகரா, அரோகரா என பக்தி கோஷங்களை எழுப்பி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஊராட்சி மன்ற தலைவர் செல்வராசு, இந்து சமய அறநிலை துறை செயல் அலுவலர் மாலா, தக்கார் கோவிந்தசாமி, மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர். கோவிலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சண்டிகேஸ்வரர் உற்சவமும், நாளை (திங்கட்கிழமை) மஞ்சள் நீராட்டு விழாவுடன் நிறைவடைகிறது.

Tags:    

மேலும் செய்திகள்