தென்காசி, சங்கரன்கோவில் உழவர் சந்தைகளில் தக்காளி விற்பனை; கலெக்டர் தகவல்

தென்காசி, சங்கரன்கோவில் உழவர் சந்தைகளில் நியாயமான விலையில் தக்காளி விற்பனை செய்யப்படுவதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Update: 2023-07-09 18:45 GMT

தென்காசி மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தக்காளி விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ள நிலையில் ஒரு கிலோ ரூ.150 வரை பொதுச் சந்தைகளில் விற்கப்பட்டு வருகிறது. இதனை கருத்தில் கொண்டு பொதுமக்களுக்கு நியாய விலையில் தக்காளி கிடைக்கும் வகையிலும், தக்காளி பயிர் சிறு விவசாயிகளுக்கு இடைத்தரகர் இன்றி நியாயமான விலை கிடைக்கும் முறையிலும் உழவர் சந்தைகளில் தக்காளி விற்பனையை அதிகப்படுத்தி விலையை கண்காணிக்க தோட்டக்கலைத்துறை மற்றும் வேளாண் வணிகத் துறைக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து தென்காசி மற்றும் சங்கரன்கோவில் உழவர் சந்தைகளில் தக்காளி வரத்தினை அதிகப்படுத்தவும் நியாயமான விலையில் தக்காளி கிடைக்கவும் அனைத்து வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர்கள் வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறையினரோடு இணைந்து நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். தமிழக அரசின் உன்னத திட்டமான உழவர் சந்தைகளை தக்காளி விவசாயிகளும், பொதுமக்களும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், உழவர் சந்தையில் தக்காளி கிலோ 85 ரூபாய்க்கு விற்பதற்கும், வரத்தை பொறுத்து விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்