திருத்துறைப்பூண்டியில் தக்காளி ஒரு கிலோ ரூ.15-க்கு விற்பனையானது. இதனால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
முக்கிய பங்கு வகிக்கும் தக்காளி
தக்காளி இல்லாத உணவு பொருட்களை தயாரிக்க முடியாது. ரசம் முதல் பிரியாணி வரை அனைத்து சைவம் மற்றும் அசைவ உணவுகளிலும் தக்காளி இடம் பெரும். உணவுகளின் சுவை அதிகரிப்பதில் தக்காளி முக்கிய பங்கு வகிக்கிறது. அதே போல் தக்காளி சார்ந்த அழகு சாதன பொருட்களும் தயாரிக்கப்படுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக தக்காளி விலை அதிகரித்து காணப்பட்டது. இதனால் இல்லத்தரசிகள் கவலையில் இருந்தனர். திருத்துறைப்பூண்டியில் 1 கிலோ தக்காளி ரூ.150 முதல் ரூ.140 வரை விற்பனையானது.
1 கிலோ தக்காளி ரூ.15-க்கு விற்பனை
இந்தநிலையில் திருத்துறைப்பூண்டி பகுதியில் பொதுமக்கள் வசதிக்காக தோட்டக்கலைத்துறை சார்பில் உழவர் சந்தைகளில் கிலோ ரூ.90-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது வெளிமாநிலங்களில் இருந்து தற்போது வரத்து அதிகரித்ததால் தக்காளி விலை படிப்படியாக குறைந்தது. நேற்று திருத்துறைப்பூண்டி பகுதிகளில் உள்ள சாலையோரங்களில் தள்ளுவண்டிகளில் விற்பனைக்காக தக்காளி குவித்து வைக்கப்பட்டுள்ளது. வியாபாரிகள் 1 கிலோ தக்காளி ரூ.15-க்கு விற்பனை செய்தனர். இதனால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வியாபாரிகள் கவலை
இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், தக்காளியின் விலை வீழ்ச்சி மிகவும் மோசமாக உள்ளது. இதனால் கிலோ ரூ.15-க்கு நாங்கள் விற்பனை செய்கிறோம். தக்காளி விலை சரிவுக்காக இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்தாலும் கூட வியாபாரம் செய்யும் நாங்கள் லாபம் இல்லாமல் கவலையில் உள்ளோம் என்றனர்.