தோட்டக்கலைத்துறையின் மூலம்குறைந்த விலையில் தக்காளி விற்பனைகலெக்டர் சரயு தகவல்

Update: 2023-07-15 19:45 GMT

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறையின் மூலம் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யப்படும் என்று கலெக்டர் சரயு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தக்காளி விலை

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக தக்காளி விலை அதிகரித்து, ஒரு கிலோ ரூ.140 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. பொதுவாக தக்காளி மட்டுமல்லாது அனைத்து காய்கறிகளும் வரத்து மற்றும் வினியோகம் வைத்து விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. சராசரியாக நாள் ஒன்றுக்கு 1,200 மெட்ரிக் டன் அளவு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தக்காளி உற்பத்தி செய்யப்படுகிறது.

கடந்த 15 நாட்களில் தக்காளி வரத்து குறைந்து 250 மெட்ரிக் டன் அளவே உற்பத்தி ஆகிறது. மேலும், தற்போது ராயக்கோட்டை தக்காளி சந்தையில் இருந்து ஒரு நாளைக்கு 50 மெட்ரிக் டன் தக்காளி வெளி மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகிறது. பொதுவாக பருவம் தவறிய மழைப்பொழிவு, விவசாயிகள் புதிய தக்காளி நடவு செய்யாத காரணத்தால் தற்போது உற்பத்தி குறைந்து விலை அதிகரித்துள்ளது.

குறைந்த விலைக்கு விற்பனை

கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள உழவர் சந்தைகளில் தற்போது விலை கட்டுப்படுத்தப்பட்டு தக்காளி வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தோட்டக்கலை துறை மூலம் உழவர் சந்தைகளில் விவசாயிகளிடம் இருந்து தக்காளி நேரடியாக கொள்முதல் செய்து குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம், தோட்டக்கலை துறையின் TANHODA OUTLET மூலம் தக்காளி நேரடியாக விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து, குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும் தக்காளியின் உற்பத்தி குறைவாக உள்ள மாவட்டங்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட தோட்டக்கலை துறையின் மூலம் இங்குள்ள விவசாயிகளிடம் தக்காளி நேரடியாக கொள்முதல் செய்து, மற்ற மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகிறது. இதன் மூலம் தக்காளியின் விலை கட்டுக்குள் வைக்கப்படுகிறது. தோட்டக்கலை துறையின் TANHODA OUTLET மூலம் குறைந்த விலையில் விற்பனை செய்யும் தக்காளியை பொதுமக்கள் பெற்று பயன் அடையலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்